உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பூர் கோவிலில் சிறப்பு பூஜை; அன்னதானம்

திருப்பூர் கோவிலில் சிறப்பு பூஜை; அன்னதானம்

திருப்பூர்: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, திருப்பூர், அவிநாசி, பல்லடம் பகுதிகளில் உள்ள கோவில்களில், சிறப்பு அபிஷேகம், விசேஷ பூஜைகள் நடைபெற்றன. சதுர்த்தியை ஒட்டி, திருப்பூர் டவுன்ஹால் செல்வ விநாயகர் கோவிலில், நேற்று காலை, 4:00 மணிக்கு, கலச பூஜை மற்றும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. மூலவருக்கு பால், தயிர், நெய், பஞ்சாமிர்தம், திருமஞ்சனம், எலுமிச்சை, கரும்பு சாறு, இளநீர், நெல்லி சாறு, பழ வகைகள் உள்ளிட்ட, 16 திரவியங்கள் மூலம், சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. சந்தன காப்பு அலங்காரத்தில், விநாயகர் அருள்பாலித்தார். ஷெரீப் காலனி குறிஞ்சி நகர், சித்தி விநாயகர் கோவிலில், நேற்று காலை, 5:00 மணிக்கு, கணபதி ஹோமம், கசல ஸ்தாபன ஹோமம் நடைபெற்றது. காலை, 7:00 மணிக்கு, 18 திரவியங்களில் சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, சந்தன காப்பு, நவரத்தின அலங்காரத்தில், பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தேவார இன்னிசை, வான வேடிக்கை, மேள தாளம் முழங்க, உற்சவர் வீதி உலா நடைபெற்றது.அவிநாசி: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் உள்ள செல்வ விநாயகருக்கு அபிஷேகம், சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து, மூஞ்சூறு வாகனத்தில் வீதியுலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அவிநாசி கிழக்கு ரத வீதியில் உள்ள காசி விநாயகர் கோவிலில், சிறப்பு அபிஷேகம், வழிபாடு நடந்தன. அதன்பின், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தாளக்கரையில் ஸ்ரீலட்சுமி நரசிங்க பெருமாள் கோவில் சர்ப விநாயகர் சன்னதியில், கொழுக்கட்டை, எள்ளுருண்டை ஆகியன, நைவேத்யமாக படைக்கப்பட்டன. அவிநாசி காமராஜ் நகர் ஸ்ரீகுழந்தை விநாயகர் கோவில், வ.உ.சி., காலனி தென்முக சித்தர் கணபதி கோவில், சக்தி நகர் ஸ்ரீசக்தி விநாயகர் கோவில், தாளக்கரை அண்ணா வீதி பிரசன்ன விநாயகர் கோவில், வள்ளுவர் வீதி ஸ்ரீவில்வ விநாயகர் கோவில் மற்றும் மெயின் ரோட்டில் உள்ள அரச மரத்தடி பிள்ளையார் கோவில் என, அவிநாசி வட்டார விநாயகர் கோவில்களில், சதுர்த்தி விழா சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பல்லடம்: பல்லடத்தில் உள்ள தண்டபாணி கோவில், அங்காளம்மன் கோவில், பொன்காளியம்மன் கோவில், பனப்பாளையம் மாரியம்மன் கோவில், ராயர்பாளையம் அம்மன் கோவில், முத்துக்குமாரசாமி மலைக்கோவில், செஞ்சேரிமலை மந்திரகிரி வேலாயுதசாமி கோவில் உள்ளிட்ட இடங்களில், சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !