உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விநாயகனே வினை தீர்ப்பவனே...பக்தி கோஷங்களுடன் சதுர்த்தி விழா கோலாகலம்

விநாயகனே வினை தீர்ப்பவனே...பக்தி கோஷங்களுடன் சதுர்த்தி விழா கோலாகலம்

ஊட்டி:விநாயகனே வினை தீர்ப்பவனே... என்ற மங்கல வரிகள் ஒலிக்க, மாவட்டம் முழுக்க விநாயகர் சதுர்த்தி விழா, கோலாகலமாக கொண்டாடப்பட்டது.நீலகிரி மாவட்டத்தில் உள்ள விநாயகர் கோவில்களில், நேற்று அதிகாலை துவங்கி, விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டங்கள் துவங்கியது. விநாயகனே வினை தீர்ப்பவனே என்ற பாடல் வரிகள் ஆங்காங்கே ஒலிக்க, சிறப்பு பிரார்த்தனை, வழிபாடுகள் என, கோவில்கள் களை கட்டின. நேற்று அரசு விடுமுறையாக இருந்த நிலையில், பொதுமக்கள் குடும்பம் சகிதமாக கோவில்களுக்கு சென்று, பூஜை, வழிபாடுகளில் பங்கேற்றனர். வீடுகளில், கொழுக்கட்டை, வடை உட்பட பலகாரங்கள் செய்து, விநாயகருக்கு படைத்தனர்.

இந்து அமைப்புகள் உற்சாகம்:மாவட்டத்தில், பல்வேறு இந்து அமைப்புகள் சார்பில், ஆங்காங்கே சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, வழிபாடுகள் துவங்கின. இந்து முன்னணி சார்பில், ஊட்டி நகரப் பகுதிகள், மஞ்சூர், எமரால்டு, இத்தலார், காத்தாடிமட்டம் உட்பட இடங்களில், 150க்கும் மேற்பட்ட சிலைகள், இந்து பரிஷத் பூசாரிகள் பேரவை சார்பில், 55 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. மாவட்டம் முழுக்க, 673 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன என, காவல்துறை கணக்கெடுப்பு கூறுகிறது. ஊட்டியில், பூசாரிகள் பேர வை சார்பில்,19ம் தேதி விநாயகர் சதுர்த்தி ஊர்வலம், ஊட்டி அசெம்பளி திரையரங்கில் துவங்கி, கமர்சியல் சாலை, மெயின் பஜார் வழியாக பஸ் ஸ்டாண்ட் செல்கிறது. இந்து முன்னணி சார்பில், வரும், 20ம் தேதி, ஊட்டி தேவாங்கர் மண்டபத்தில் இருந்து விசர்ஜன ஊர்வலம் துவங்குகிறது.

கோத்தகிரியில், இந்து மக்கள் கட்சி, அனுமன் சேனா சார்பில், பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள், வரும், 21ம் தேதி விசர்ஜன ஊர்வலம் நடத்தப்பட உள்ளது. மற்ற அனைத்து இடங்களிலும், விநாயகர் விசர்ஜன ஊர்வலம் நடத்தப்பட உள்ளது. அலங்காரங்களில் அசத்தல்பக்தர்களின் செல்லமான கடவுளாக விளங்கும் விநாயகர் சிலைகள், மாவட்டத்தின் பல இடங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தன. அதில், விநாயகர் சிலைகள் அவருக்கே உரித்தான எலி வாகனம், மற்றும், மான், சிங்கம், புலி, மயில், கிளி, அன்னப்பறவை, பாம்பு என, பக்தர்களின் விருப்பத்துக்கு ஏற்ற வாகனங்களில் அமர்ந்தபடி விநாயகர் காட்சியளித்தார். தவிர, துப்பாக்கி ஏந்தியவாறும், பல்வேறு இசை கருவிகளை ஏந்தியவாறும், விநாயகர் காட்சியளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !