உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சபரிமலை மண்டல மகர-விளக்கு சீசன் ரோடுகள் சீரைமக்க ரூ.170 கோடி ஒதுக்கீடு!

சபரிமலை மண்டல மகர-விளக்கு சீசன் ரோடுகள் சீரைமக்க ரூ.170 கோடி ஒதுக்கீடு!

சபரிமலை: சபரிமலையில் மண்டல மகரவிளக்கு சீசனுக்காக, சபரிமலை செல்லும் ரோடுகளை சீரமைக்க 170 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து முதல்வர் உம்மன்சாண்டி தலைமையில் நடைபெற்ற உயர்மட்ட கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. சபரிமலையில் மண்டல மகரவிளக்கு சீசன் தொடங்க இன்னும் 54 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் கேரள அரசு அதற்கான ஆயத்த பணிகளை தொடங்கியுள்ளது. முதல்வர் உம்மன்சாண்டி தலைமையில் திருவனந்தபுரத்தில் அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் ராஜ்யசபா துணை தலைவர் பேராசிரியர் குரியன், மாநில அமைச்சர்களான மாணி, ரமேஷ்சென்னித்தலா, சிவகுமார், அடூர் பிரகாஷ், இப்ராகிம் குஞ்சு, திருவஞ்சூர் ராதாகிருஷ்ணன், எம்.கே. முனிர், தேவசம்போர்டு தலைவர் கோவிந்தன்நாயர், உறுப்பினர்கள் சுபாஷ்வாசு, குமாரன் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் வருமாறு:

சபரிமலை செல்லும் அனைத்து ரோடுகளையும் பழுதுநீக்கி தார் போட 170 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. சன்னிதானத்தில் கட்டப்பட்டு வரும் கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் அக்டோபர் 19-ம் தேதி திறக்கப்படும். சன்னிதானம் செல்லும் பாதையில் ஆறு கியூ காம்ப்ளக்ஸ் பணிகள் மண்டல காலத்துக்கு முன்னர் நிறைவு செய்யப்படும். சன்னிதானத்தில் 120 கழிவறைகள், 60 குளியலறைகள், பம்பையில் 88 கழிவறைகள் கொண்ட கட்டிடங்கள் சீசனுக்கு முன்னர் கட்டி முடிக்கப்படும். பம்பையில் புதிய அன்னதானம் மண்டபம், ஓட்டல் காம்ப்ளக்ஸ், பிரசாத தயாரிப்புக்கான குடோன் ஆகியவை சீசனுக்கு முன்னர் முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். சுவாமி ஐயப்பன் ரோட்டில் 1.7 கோடி ரூபாய் செலவில் எபிசி கேபிள் வழியாக மின் விளக்கு வசதி செய்யப்படும். நிலக்கல்லில் ஒரே நேரத்தில் 10 ஆயிரம் வாகனங்கள் பார்க்கிங் செய்ய வசதி ஏற்படுத்தப்படும். சபரிமலையில் 800 துப்புரவு தொழிலாளர்கள் தற்காலிகமாக நியமிக்கப்படுவார்கள். சன்னிதானத்தில் ஐந்து கோடி ரூபாய் செலவில் புதிய ஆஸ்பத்திரி கட்டப்படும். சீசனில் 20 ஆம்புலன்ஸ் மற்றும் நான்கு மொபைல் மெடிக்கல் வாகனங்களும் பணியில் ஈடுபடுத்தப்படும். பக்தர்கள் வரும் பாதையில் வசதிகள் செய்வற்காக அந்த பகுதியில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படும். இவ்வாறு முடிவுகள் எடுக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !