உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / 27ம் தேதி விநாயகர் சிலை விசர்ஜனம்: 200க்கும் மேற்பட்ட போலீசார் அணிவகுப்பு

27ம் தேதி விநாயகர் சிலை விசர்ஜனம்: 200க்கும் மேற்பட்ட போலீசார் அணிவகுப்பு

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த, 17ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. மாவட்டம் முழுவதும் ஹிந்து அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சார்பில், கடந்த ஆண்டை காட்டிலும் கூடுதலாக விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. ஓசூர் உட்கோட்டத்தில் மட்டும், 700க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் போலீசார் அனுமதியுடன் வைக்கப்பட்டன. 100க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் போலீசார் அனுமதியின்றி வைக்கப்பட்டு விசர்ஜனம் செய்யப்பட்டுள்ளன. ஓசூர் பகுதியில் வரும், 27ம் தேதி, ஹிந்து அமைப்புகள் சார்பில், பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலை விசர்ஜனம் செய்யப்படுகிறது. இதற்காக கிருஷ்ணகிரி, தர்மபுரி, நாமக்கல், சேலம் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து போலீசார் பாதுகாப்பு பணிக்கு வர உள்ளனர். இதையொட்டி, ஓசூரில் நேற்று காலை எஸ்.பி., கண்ணம்மாள் தலைமையில், 200க்கும் மேற்பட்ட போலீசார் அணிவகுப்பு நடத்தினர். நேதாஜி ரோடு, காந்தி சிலை, ராயக்கோட்டை சாலைகளில் அணிவகுப்பு நடந்தது. கிருஷ்ணகிரி மாவட்ட உட்கோட்டங்களில், பிரதிஷ்டை செய்யப்பட்டு கரைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் குறித்த விபரங்கள், அந்தந்த காவல்துறை அலுவலகத்தில் பராமரிக்கப்படுவது வழக்கம். கடந்த ஆண்டு, மாவட்டம் முழுவதும் பிரதிஷ்டை செய்யப்பட்ட, 1,950 விநாயகர் சிலைகள் குறித்த விபரங்களும் பதிவு செய்யப்பட்டன. ஆனால், இந்த ஆண்டு பிரதிஷ்டை மற்றும் விசர்ஜனம் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் எவ்வளவு என்பது குறித்த சரியான தகவல் போலீசாரிடம் இருப்பதாக தெரியவில்லை. இதனால், சரியான பட்டியலை வழங்க முடியாமல் போலீசார் திணறுவதுடன், கடந்த ஆண்டு விசர்ஜனம் செய்யப்பட்ட, 1,950 விநாயகர் சிலைகள் தான் இந்த ஆண்டும் வைக்கப்பட்டுள்ளதாக கூறி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !