ஆதிதிருவரங்கத்திற்கு பக்தர்கள் நடைபயணம்
திருக்கோவிலூர்: விழுப்புரம், உலகளாம்பூண்டி பகுதியை சேர்ந்த பக்தர்கள் ஆதிதிருவரங்கத்திற்கு நடைபயணம் மேற்கொண்டனர். ஆதிதிருவரங்கம், சோமுகன் என்னும் அசுரனை, பகவான் பெருமாள் வதம் செய்து அழித்து வேதங்களை மீட்டெடுத்து பிரம்மனுக்கு உபதேசம் செய்த ஸ்தலம். சந்திரன் தனது மனைவியின் சாபத்தால் ஒளி மங்கியிருந்த நேரத்தில் தேவர்களின் அறிவுரைக்கேற்ப, இத்தலத்தில் எழுந்தருளி பெரிய பெருமாளை வணங்கி, இழந்த பொலிவை பெற்றார் என்பது வரலாறு. தமிழகத்திலேயே மிகப்பெரிய பள்ளிகொண்ட பெருமாள் இவர், என்பது குறிப்பிடத்தக்கது. ரங்கநாத பெருமாளை வணங்கினால், இழந்த செல்வத்தை பெறுவதுடன், கல்வி செல்வம், பிள்ளை பேறு கிட்டும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. சிறப்புவாய்ந்த இத்தலத்திற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து பக்தர்கள் நடைபயணம் மேற்கொள்ளும் சம்பிரதாயம் தற்போது அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் செஞ்சியை அடுத்த உலகலாம்பூண்டி மற்றும் சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள், நடைபயணம் மேற்கொண்டனர். விழுப்புரம், கப்பூர், காணை வழியாக நடைபயணம் மேற்கொண்ட பக்தர்களுடன் வழிநெடுகிலும் உள்ள வைணவ பக்தர்கள் இணைந்து, நேற்று திருக்கோவிலூரை கடந்து ஆதிதிருவரங்கத்தை சென்றடைந்தனர். அங்கு பெரியபெருமாளை சேவித்து, இரவு தங்கியிருந்து நேர்த்திக் கடன் செலுத்தினர். இப்பயணத்தில் ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் கலந்துக் கொண்டனர்.