கமுதி அருகே ஆண்கள் மட்டும் வழிபட்ட வினோத திருவிழா!
பெருநாழி: ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே, ஆண்கள் மட்டும் இரவு முழுவதும் அம்மனை வழிபட்ட வினோத திருவிழா நடந்தது. கமுதி அருகே, முதல்நாடு காட்டுப்பகுதியில், கடந்த, 60 ஆண்டுகளாக பிடாரி அம்மன் திருவிழா நடக்கிறது. இவ்விழா ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி, 3வது சனிக்கிழமை நடப்பது வழக்கம். 10க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த ஆண்கள் மட்டும் பங்கேற்கின்றனர். நேற்று முன்தினம் விழா நடந்தது. இதற்கு அப்பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான ஆண்கள், 3 கி.மீ., காட்டுக்குள் நடந்து சென்றனர். அங்கு, அவர்கள் மண்பீடம் செய்து, அம்மனை உருவாக்கினர். பச்சரிசியை சமைத்து, உருண்டையாக உருட்டி, பனை ஓலையில் அம்மனுக்கு படையலிட்டனர். அதி காலையில் செம்மறி ஆடுகளை வெட்டி சமைத்தனர். அதுவரை அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. இரவு முழுவதும் நடந்த இத்திருவிழாவில், பெண்கள் யாரும் பங்கேற்கவில்லை. சிலர் பாரம்பரியம் மாறாமல் பனை ஓலையில் உணவு உண்டனர்.