எப்படி தூக்கியிருப்பாங்க...?
கோயில்கள்... தமிழர்களின் கட்டடக் கலைக்கு சான்றுகள். மன்னர்கள் காலத்தில் அமைக்கப்பட்ட பிரம்மாண்டமான கற்கோபுரங்கள் இன்றும் தலைநிமிர்ந்து அவர்களின் வரலாற்றை சொல்லிக் கொண்டிருக்கின்றன. இன்று நம்ம ஊரு வாலிபக் கல்லை தூக்குவதற்குள் போதும்டா சாமி என்று கீழ் மூச்சு, மேல் மூச்சு வாங்கும்போது, பல ஆயிரம் கிலோ எடையுள்ள கற்களை எப்படி தூக்கி, நிறுவி, அடுக்கி.... நினைக்கும்போதே பிரமிப்பாக இருக்கிறதா. தஞ்சை பெரிய கோயில் கோபுரத்தை ராஜராஜசோழன் உருவாக்கும்போது, கோபுரத்திற்கு ஈடாக மண் கொட்டப்பட்டு, அதன்மீது யானைகளை கொண்டு கற்களை உருட்டி, உருட்டி கோபுர உச்சியில் சேர்த்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறுவது உண்டு. ஆங்கிலேயர் காலத்தில் கற்களை இரும்புச் சங்கிலியால் இணைத்து, கைகளாலோ, யானையை கொண்டோ இழுத்து, தூக்கி வண்டியில் கொண்டுசென்று கட்டப்பட்ட கற்கட்டடங்கள் இன்னும் ஸ்ட்ராங்காக இருக்கின்றன. எப்படி தூக்கியிருப்பாங்க...? என யோசிப்பதற்குள், அருகில் உள்ள படத்தை பார்த்துவிடுங்கள். புரிந்துவிட்டதா... அதேதான், கல்லை தூக்க உதவும் கருவியேதான். ராமேஸ்வரம் கோயில் இரண்டாம் பிரகாரம் பராமரிப்பு பணி முப்பது ஆண்டுகளுக்கு முன் வரை ஒவ்வொரு கட்டமாக நடந்தது. அப்போது கற்களை தூக்கவும், வண்டியில் ஏற்றவும் இந்த கருவிதான் முதுகாக இருந்து உதவியிருக்கிறது. அதன் பின், பராமரிப்பு பணியில் தொய்வு ஏற்பட, இன்று வரை கோயிலுக்குள் கடல் காற்றை சுவாசித்துக் கொண்டு ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கிறது இப்போதுள்ள கிரேன்களுக்கு எல்லாம் வழிகாட்டியான இந்த தூக்கு தூக்கி.