சபரிமலை பயணத்துக்கு பாதுகாப்பு பாதை: கேரள அமைச்சரவை அனுமதி!
திருவனந்தபுரம்: சபரிமலை பயணத்துக்கு பாதுகாப்பு பாதை என்ற திட்டத்துக்கு கேரள அமைச்சரவை அனுமதி வழங்கியது. ரோடுகள் சீரமைப்புக்கு தேர்தல் கமிஷனின் அனுமதியுடன் முதற்கட்டமாக 70 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. சபரிமலையில் மண்டல சீசன் தொடங்க இன்னும் 39 நாட்கள் உள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அண்மையில் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற அமைச்சர்கள் கூட்டத்தில் சபரிமலை சீசனுக்காக ரோடுகள் சீரமைப்பு மற்றும் இதர பணிகளுக்காக 170 கோடி ரூபாய் அனுமதிக்கப்பட்டது. கேரளாவில் தற்போது உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ளதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்று முதற்கட்டமாக 70 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதியை பன்படுத்தி பத்தணந்திட்டை, கோட்டயம், இடுக்கி, ஆலப்புழா மாவட்டங்களில் ரோடுகள் சீரமைக்கும் பணி உடனடியாக தொடங்கும்.சபரிமலை பயணத்தில் விபத்துக்களை குறைக்க இந்த சீசனில் அதிக கவனம் செலுத்த மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக பாதுகாப்பு பாதை என்ற திட்டத்துக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதன் படி விபத்துக்கள் நடைபெறும் இடங்கள் கண்டறியப்பட்டு அங்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படும்.