உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தயாள குணம் படைத்தவர் சுவாமி தயானந்த சரஸ்வதி : மடாதிபதிகள் புகழாரம்

தயாள குணம் படைத்தவர் சுவாமி தயானந்த சரஸ்வதி : மடாதிபதிகள் புகழாரம்

கோவை: தயாள குணம் படைத்த சுவாமி தயானந்த சரஸ்வதியால் ஆன்மிகத்தில், புதிய மறுமலர்ச்சி ஏற்பட்டுள்ளது என, பல்வேறு மடாதிபதிகள் புகழாரம் சூட்டினர். கோவை, ஆனைகட்டி, ஆர்ஷ வித்யா குருகுலத்தை நிறுவிய, சுவாமி தயானந்த சரஸ்வதி, கடந்த செப்.,23ல் ரிஷிகேஷில் முக்தியடைந்தார். இதையொட்டி, ஆனைகட்டி ஆசிரமத்தில், சிறப்பு வழிபாடு நேற்று நடந்தது. மடாதிபதிகள் பங்கேற்றனர்.ஆர்ஷ வித்யா குருகுல நிர்வாகி, சதாத்மானந்தா சுவாமி தலைமை வகித்தார். ராமன்ஜி முன்னிலை வகித்தார்.

சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள் பேசியதாவது: இந்தியாவிலுள்ள அனைத்து மடங்களையும், ஒருங்கிணைத்த பெருமை பூஜ்யஸ்ரீ தயானந்த சரஸ்வதி சுவாமிகளையே சாரும். இந்து சமய மறுமலர்ச்சிக்காக அவர் ஆற்றிய பணிகள் போற்றுதலுக்குரியது.

காசிமடம், சுந்தரமூர்த்தி தம்பிரான்: சுவாமிஜி, அனைவரிடத்திலும் அன்பு கொண்டவர். சுவாமி விவேகானந்தருக்கு பிறகு, மதமாற்றத்தை எதிர்த்தவர். வாழ்க்கை தத்துவங்களை எளிமையாக விளக்கியவர்.

கோவிலூர் மடாதிபதி, மெய்யப்ப ஞானதேசிக சுவாமிகள்
: சுவாமி தயானந்த சரஸ்வதி, எப்போதும் நேர்மறை கருத்துகளையே கூறுவார். பெயருக்கு ஏற்றாற்போல், தயாள குணம் கொண்டவர்.அப்பர்மடம், சிவக்ஞான தேசிக சுவாமிகள்: வேதங்களின் உட்பொருளை, எளிமையாக விளக்கியவர். நூற்றுக்கணக்கான கோவில் கும்பாபிஷேக நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்தியவர்.

பிள்ளையார் பீடம், பொன்மணிவாசக சுவாமிகள்: எல்லோரிடமும் அன்பு காட்டியவர். ஆனைகட்டி பழங்குடி மக்கள் வாழ்வு உயர, வளர்ச்சிப்பணிகளை முன்னின்று நடத்தியவர். சேவை செய்ய, பிறருக்கு எடுத்துக்காட்டாக விளங்கியவர்.

காமாட்சிதாசர் சுவாமிகள்: சுவாமிஜி தவ வலிமை மிக்கவராக இருந்தார். அதனால், இறைவனுக்கு நிகரான சக்தி பெற்று திகழ்ந்தார்.

லலிதாம்பிகை பீடம், ஜகன்னாத சுவாமிகள்:
துரும்பாக இருந்த என்னை, அரும்பாக மாற்றிய பெருமை பெற்றவர் சுவாமிஜி. ஜோதிடத்தில் சுவாமிகள் மிகுந்த ஞானம் பெற்று விளங்கினார்.

அகஸ்தியர் ஆசிரமம், காட்டு சுவாமிகள்:
சகல சக்திகளுடன் விளங்கிய சுவாமி தயானந்த சரஸ்வதியின் பணிகள் போற்றதலுக்குரியவை.

காமாட்சிபுரம் ஆதீனம், சாக்த சிவலிங்கேஸ்வர சுவாமிகள்
: சுவாமிஜியின் பணிகள் என்றும் தொடரும். அவருடைய நினைவாக அவரை போற்றி எழுதப்பட்ட பாடல்கள் அடங்கிய சிறு புத்தகத்தை வெளியிடுவதில் பெருமை கொள்கிறேன்.

மவுனகுரு மடம், மவுன சுந்தரமூர்த்தி சுவாமிகள்:
திருமுறை பாடல்களில், சுவாமிகள் காட்டிய ஈடுபாடு வியக்கத்தக்கது. அவருடைய பணிகளை, ஆன்மிக உலகம் மறக்காது.

தர்மபுரம் ஆதீனம் குமாரசுவாமிகள்: சுவாமிஜி, தன்னிடம் உள்ளவற்றை அனைவருக்கும் கொடுக்கும் தயாள குணமிக்கவர். நல்ல இசை வல்லுனராகவும், நகைச்சுவை மிக்கவராகவும் திகழ்ந்தார்.

வாரஹி மந்திராலயம் வாரஹி மணிகண்ட சுவாமிகள்:
சபையில் எப்போது, எப்படி பேச வேண்டும் என்பதை தெரிந்து பேசுவது நல்லது என, அறிவுரை கூறியவர் சுவாமிஜி.

செஞ்சேரிமலை திருநாவுக்கரசு மடம் முத்துசிவராமசாமி சுவாமிகள்:
சுவாமியின் புகழ், உலகம் முழுவதும் பரவி உள்ளது. அனைவருக்கும் சிறந்த வழிகாட்டியாக திகழ்ந்தவர். இவ்வாறு, மடாதிபதிகள்புகழாரம் சூட்டினர். நிகழ்ச்சியில், திருவாவடுதுறை ஆதீனம் அம்பலவாண தம்பிரான், பொம்மபுரம் ஆதீனம் சிவக்ஞான பாலய சுவாமிகள், சி.பி.ஐ., முன்னாள் இயக்குனர் கார்த்திகேயன், கிருஷ்ணா ஸ்வீட்ஸ் உரிமையாளர் கிருஷ்ணன், முன்னாள் மத்திய அமைச்சர் எஸ்.ஆர். பாலசுப்பிரமணியன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !