உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெருமாள் கோயிலில் பூஜை நடத்த வேண்டும் கால்வாய் கிராம மக்கள் கோரிக்கை

பெருமாள் கோயிலில் பூஜை நடத்த வேண்டும் கால்வாய் கிராம மக்கள் கோரிக்கை

செய்துங்கநல்லூர் : பெருமாள் கோயிலில் பூஜை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கால்வாய் கிராம மக்கள் அமைச்சரிடம் மனு கொடுத்தனர்.தமிழக அறநிலையத்துறை அமைச்சர் சண்முகநாதன் தன் தொகுதி மக்களுக்கு நன்றி கூற கருங்குளம் பகுதிக்கு வந்தார். அவரை கருங்குளம் ஒன்றிய அதிமுக.,செயலாளர் சிவசுப்பிரமணியன் மற்றும் கருங்குளம் யூனியன் சேர்மன் கோசல்ராம் ஆகியோர் நெல்லை-திருச்செந்தூர் மெயின் ரோட்டில் கால்வாய் விலக்கில் அமைச்சரை வரவேற்றனர்.அங்கிருந்து புளியங்குளம் கிராமம் சென்றனர். பின்னர் கால்வாய் கிராமத்திற்கு வந்த அவரை முன்னாள் பஞ்.,தலைவர் ஆச்சிமுத்து தலைமையில் சந்தனமாலை அணிவித்து வரவேற்றனர். அப்போது பொதுமக்கள் சார்பில் பெருமாள் கோயிலில் தினமும் பூஜை நடத்த நடவடிக்கை எடுக்க கோரி மனு கொடுக்கப்பட்டது. அதில் எங்கள் கிராமத்தில் மிகவும் பழமையான கோயிலான பெருமாள் கோயில் உள்ளது. அதற்கு சொந்தமான 20 ஏக்கர் நன்செய் நிலமும் உள்ளது. அதை பலர் அனுபவித்து வருகின்றனர். அதே நேரத்தில் பெருமாள் கோயில் பாழடைந்த நிலையில் உள்ளது. அதை உழவாரப்பணி செய்து தினமும் பூஜை நடத்த அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தது. பின்னர் அவர் அங்குள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்தார். அங்கிருந்து திருவரங்கப்பட்டி கிராமம் சென்றார். அங்கு கூடியிருந்த மக்கள் தங்கள் கிராமத்திலுள்ள குழந்தைகள் படிப்புக்கு வசதியாக டவுன் பஸ் வந்து செல்ல வேண்டும் என்றும் கால்வாயில் செயல்படும் ரேஷன் கடையிலிருந்து பொருட்கள் வாங்குவது சிரமமாக இருப்பதால் தங்கள் கிராமத்திற்கு பகுதி ரேஷன் கடை அமைத்து தரவேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். பின்னர் அரசர்குளம் கிராமம் சென்று அங்கு அமைந்துள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்தார். பின்னர் வல்லக்குளம், மணல்விளை, புதுக்குளம், அரியநாயக்கபுரம்சென்றார்.சென்ற இடம் எல்லாம் பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை அமைச்சரிடம் கொடுத்தனர். பின்னர் அங்கிருந்து கொங்கராயகுறிச்சி, ஆழ்வாற்கற்குளம், ஆறாம்பண்ணை ஆகிய கிராமங்களுக்கு சென்றார். அவருடன் கருங்குளம் ஒன்றிய அதிமுக.,செயலாளர் சிவசுப்பிரமணியன், யூனியன் சேர்மன் கோசல்ராம், மாவட்ட பஞ்.,கவுன்சிலர் திருபாற்கடல், ஒன்றிய இளைஞர் பாசறை செயலாளர் கதிரேசன், ஒன்றிய துணைத் தலைவர் முத்தையா, மாவட்ட சிறுபான்மை துணை செயலாளர் முஸ்தபா உட்பட பலர் சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !