கோவில், அன்னதானத்தில், வெங்காயமா?
சென்னை: சென்னை, திருவல்லிக்கேணி, பார்த்தசாரதி கோவிலில் ஆகம விதிகளை மீறி அன்னதான திட்டத்திற்கான உணவுகளும், பிரசாதங்களும் தயாரிக்கப்படுவதாக பக்தர்கள் புகார் தெரிவித்துள்ளனர்; இதை, கோவில் துணை ஆணையர் மறுத்துள்ளார்.
இதுகுறித்து பக்தர் ஒருவர் கூறியதாவது: பார்த்தசாரதி கோவிலுக்குள் பிரசாதம் செய்ய தனி இடம் உண்டு. இங்கே அனைத்து பிரசாதங்களும் ஐதீக முறையில் தயாரித்து விற்பனை செய்வதாக நம்பி, பக்தர்கள் வாங்குகின்றனர். ஆனால், பிரசாதம் செய்வதற்கு, டெண்டர் எடுத்தவர், ஒரு சில பிரசாதங்களைத் தவிர, மற்ற வற்றை, திருச்சி, திருவானைக்காவலில் ஒரு, பேக்டரியில் தயாரித்து, வாரம் ஒருமுறை எடுத்து வருகிறார். இது தவிர, மேலும் ஒரு ஆகம விதி மீறல் நடக்கிறது. அதாவது, கேரட், பீன்ஸ், முட்டைகோஸ், வெங்காயம் போன்ற வற்றை கோவிலில் பயன்படுத்த கூடாது; ஆனால், அரசின் அன்னதான திட்டத்தில், அவை அனைத்தும் பயன்படுத்தப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இவரைப் போல் இன்னும் பல பக்தர்களும், அன்னதான திட்டம் மற்றும் பிரசாத தயாரிப்பில், ஆகம விதி மீறுவதாக புகார் தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து கோவில் துணை ஆணையர் கோதண்டராமன் கூறியதாவது:பார்த்தசாரதி கோவில் மடப்பள்ளியில், நைவேத்தியம் மட்டுமே தயார் செய்யப்படுகிறது.கோவிலுக்கு பின்புறம் உள்ள இடத்தில் தான், மற்ற பிரசாதங்கள் தயார் செய்யப்படுகின்றன. அன்னதான திட்டத்தில் வெங்காயம் போன்றவற்றை பயன்படுத்துவது இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.