சதுரகிரியில் துவங்கியது நவராத்திரி விழா: காப்புக்கட்டுடன் வழிபாடுகள் துவக்கம்!
வத்திராயிருப்பு: சதுரகிரி மலை ஆனந்தவல்லியம்மன் கோயிலில் நேற்று அதிகாலை காப்புக்கட்டுடன் நவராத்திரி திருவிழா துவங்கியது.இங்கு ஆடி அமாவாசை, தைஅமாவாசை, சிவராத்திரி ஆகியவை முக்கிய திருவிழாக்கள். இவை அங்குள்ள சுந்தரமகாலிங்கம், சந்தனமகாலிங்கம், சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்காக கொண்டாடப்படும்.
இங்குள்ள ஒரே பெண் தெய்வமான ஆனந்தவல்லியம்மனுக்காக கொண்டாடப்படுவது நவராத்திரி மட்டுமே. இந்த அம்மனுக்கு உருவம் கிடையாது. கோயிலில் வெறும் பீடம் மட்டும் காட்சியளிக்கும். பக்தர்கள் பீடத்திற்குத்தான் மலர் செலுத்தி , தீபம் ஏற்றி வழிபடுவர்.கொலு பஜனை: நவராத்திரி திருவிழாவின் போது தான் அம்மன் 9 நாட்கள் உருவமாக எழுந்தருளி காட்சியளிப்பார். இறுதி நாளில் அம்மன் மகிஷாசுர அரக்கனை அம்பு எய்து அழித்த பின், மீண்டும் உருவம் கலைக்கப்படும். அம்மனை உருவ வடிவில் தரிசிப்பதற்காக விழா நடைபெறும் 9 நாட்களும் ஏராளமான பக்தர்கள் மலைக்கு செல்வர். புகழ்பெற்ற இவ்விழா நேற்று அதிகாலை 3 மணிக்கு காப்புக்கட்டுடன் துவங்கியது.