இன்று வெற்றித்திருநாளான விஜயதசமி!
வெற்றித்திருநாளான விஜயதசமியில் அம்பிகையின் முன் அமர்ந்து இந்த வழிபாட்டை படித்தால் மனதில் நினைத்தது இனிதே நிறைவேறும். முயற்சியில் வெற்றி உண்டாகும்.
*உலகத்தைக் காத்தருளும் அம்பிகையே!
நீலகண்டரின் கரம் பிடித்தவளே!
ஆனை முகனின் அன்னையே!
வேதம் போற்றும் வித்தகியே!
ஞானச் சுடர்க்கொடியே! மரகத வல்லியே!
நிலவொளியாய் பிரகாசிப்பவளே!
கருணை மழையே!
அம்மா! உன் தாமரைத் திருவடிகளில் சரணடைந்தோம்.
*மங்களம் நிறைந்தவளே! ஈஸ்வரியே!
கற்பகம் போல் வாரி வழங்குபவளே!
மலையத்துவஜன் மகளே!
அபிராமவல்லியே! ஆனந்தம் அளிப்பவளே!
ஆதிபராசக்தியே! அங்கயற்கண் அம்மையே!
திருமாலின் சகோதரியே! மலர் அம்பினைத் தாங்கியவளே!
ஈசனின் இடம் பாகத்தில் உறைபவளே!
எங்களின் முயற்சியில் வெற்றியைத் தந்தருள வேண்டும்.
*புவனம் காக்கும் நாயகியே! நாராயணியே!
சாம்பவியே! சங்கரியே! சியாமளையே!
மாலினியே! திரிசூலம் ஏந்திய சூலினியே!
மதங்க முனிவரின் மகளாக வந்தவளே!
பிரபஞ்சத்தைப் படைத்தவளே!
வேதத்தின் உட்பொருளே! வீரத்தின் விளைநிலமே!
எங்களின் மீது உன் கடைக்கண்ணைக் காட்டியருள வேண்டும்.
*கடம்பவனமான மதுரையில் மீனாட்சியாக அருள்பவளே!
காஞ்சியம்பதியில் காமாட்சியாகத் திகழ்பவளே!
காசியில் உறையும் விசாலாட்சியே! பர்வதராஜனின் புத்திரியே!
அசுர சக்தியை அழித்து நீதியை நிலைநாட்டுபவளே!
திக்கற்றவருக்கு துணையாக நிற்பவளே!
வெற்றி தேவதையே!
உன் அருளால் இந்த உலக உயிர்கள் எல்லாம் நலமோடு வாழட்டும்.