மடத்துக்குளம் பகுதியில் வினோத வழிபாடு!
மடத்துக்குளம்: வெற்றிலை பாக்கு வைத்து வணங்கி, தலைமுட்டிசாமி சிலையில் தலையை மோதுவதால் நோய் நீங்குவதாக மடத்துக்குளம் பகுதியில் வினோத வழிபாடு உள்ளது. மடத்துக்குளம் அமராவதி ஆற்றின் கரையில் அமைந்துள்ள வடக்குகண்ணாடிபுத்துார், பழமையான கிராமங்களில் ஒன்றாகும். மன்னர்கள் ஆட்சியின் போது, சதுர்வேதி மங்கலமாக உருவாக்கப்பட்டது. இந்த கிராமத்தில் பழமையின் நினைவுச்சி ன்னங்களும், பழக்க வழக்கங்களும் உள்ளன. இதில், குறிப்பிடும் படியாக, தலைமுட்டிசாமி வழிபாடு உள்ளது. தலைவலியால் அவதிப்படும் மக்கள், தங்கள் நோய்தீர்க்க வேண்டி, வெற்றிலை, பாக்கு, புகையிலையுடன், ஒன்னேகால் ரூபாய் (ஒரு ரூபாய் இருபத்து ஐந்து பைசா) காணிக்கையை, இங்குள்ள சாமி சிலையின் முன்பு வைத்து வணங்கிய பின்பு, தங்களுக்கு எந்தபக்கத்தில் தலைவலி உள்ளதோ, சாமிசிலையின் தலையில் அதே பக்கத்தில் நெற்றியால் முட்டுகின்றனர். பின்பு, மீண்டும் வணங்கிவிட்டு வந்தால் தலைவலி குணமாகுவதாக நம்புகின்றனர்.
இன்றும் இந்த வினோத வழிபாடு உள்ளது. இதற்கு இந்த சிலைக்கு தலைமுட்டிசாமி எனபெயரிட்டு அழைக்கின்றனர். ஒரு ஆண், ஒரு விலங்குடன் மோதுவதை போல் இந்த சிலை அமைந்துள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் மற்றும் கவுன்சிலர் ஆனந்தன் கூறுகையில், இந்த வழிபாடு பலஆண்டுகாலமாக நடக்கிறது. தற்போது, பக்தர்களின் எண்ணிக்கை குறைந்து, இந்த பகுதி பராமரிப்பின்றி போனாலும், பழமை மாறாத முதிய வர்களும், இதர மக்களும் தலைவலி நீங்குவதற்கு தற்போதும் இங்கு வந்து, இந்த வழிபாட்டில் ஈடுபடுகின்றனர். இந்த சிலை பலநுாறு ஆண்டுகளுக்கு முந்தையதாக உள்ளது. பொதுவாக, இதை தலைமுட்டி சாமி என அழைத்தாலும், இது புலிக்குத்திக்கல் வகையை சேர்ந்ததாக இரு க்கலாம். பழமையான நினைவுச்சின்னங்களில் ஒன்றாகவுள்ள இந்த சிலை, பாதுகாப்பின்றியுள்ளது. இது குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என்றனர்.