உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நவரசம் கலந்த நவராத்திரி விழா!

நவரசம் கலந்த நவராத்திரி விழா!

இன்றைய நவீன காலத்தில் நாம் பார்த்து ரசிக்க எத்தனையோ பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் இருந்தாலும், அதில் எல்லாம் இல்லாத மகிழ்ச்சியும், மனநிறைவும், திருவிழாக்களில் நடக்கும் நாட்டுப்புற கலைநிகழ்ச்சிகளில் கிடைக்கிறது. ஜெயேந்திர சரஸ்வதி அறக்கட்டளையின், வேதபாடசாலை சார்பில், நடந்த நவராத்திரி கலை விழா இதற்கு உதாரணம். ஆர்.எஸ்.புரம் டி.வி.சாமி ரோட்டில், ஜெயேந்திர சரஸ்வதி அறக்கட்டளை வேதபாடசாலை சார்பில், நவராத்திரி விழா நடந்தது. இதில், அம்பாள் திருவீதி உலா வர, தென்னிந்திய கலை, கலாசார பண்பாட்டை வெளிப்படுத்தும் விதமாக, பல்வேறு நாட்டுப்புற கலைநிகழ்ச்சிகள் நடந்தன. தமிழகம், கேளரா மற்றும் கர்நாடக மாநிலங்களை சேர்ந்த நாட்டு புறக்கலைஞர்கள், 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, நவரசங்களை வெளிப்படுத்தும் நடனம் ஆடி, ஊர்வலமாக சென்றனர். கரகாட்டம், ஒயிலாட்டம், மானாட்டம், மயிலாட்டம், கட்டைக்கால் ஆட்டங்களுடன், செண்டை மேளம், தாரை தப்பட்டை முழங்க ஊர்வலம் களை கட்டியது. இந்து கடவுள்களின் புராண கதாபாத்திர வேடம் அணிந்து நடனம் ஆடிய கலைஞர்கள், பார்வையாளர்களை அதிகம் கவர்ந்தனர். எத்தனையோ நவீன கலை ஊடகங்கள் தோன்றி மக்களின் ரசனையை கவர்ந்தாலும், மக்களின் அடிமனதில் ஆழமாக வேரோடி கிடக்கும் இந்த ஆதிக்கலைகளை நம்மிடம் இருந்து பிரிக்க முடியாது என்பதற்கு இந்த நவராத்திரி கலைவிழா காட்சியாகவும், சாட்சியாகவும் இருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !