உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / எக்காலத்திலும் ஒலிக்குமா எக்காளம்!

எக்காலத்திலும் ஒலிக்குமா எக்காளம்!

பண்டைய தமிழர்களின் வாழ்க்கையில், தொட்டில் முதல் இடுகாடு வரை ஒவ்வொன்றுக்கும் பாடல்கள் நிறைந்திருந்தன. குழந்தையை துாங்க வைக்க தாலாட்டு பாட்டு, வளர்ந்த குழந்தைக்கு ஒழுக்கப்பாட்டு, விளையாடும்போது ஊஞ்சல் பாட்டு என ஒவ்வொரு, நிகழ்விலும் பாட்டுக்கு பஞ்சமிருக்காது. இரவு தெருக்கூத்தில் கோமாளிப்பாட்டு, இறந்தவர்களுக்காக ஒப்பாரி, விவசாயத்துக்கு உழவுப்பாட்டு என, ஒவ்வொரு தருணத்திலும், இசை, ரசனை வாழ்க்கையுடன் கலந்திருக்கும். இந்த பாடல்கள், இயற்கையோடு பின்னிப் பிணைந்து இருந்தன. பாடல்களுக்கு தகுந்த இசைக்கருவிகளை மரம், மண் பானை, பித்தளை, தாமிரம், இரும்பு ஆகியவற்றில் உருவாக்கி வந்தனர். மிகவும் பழமையான இசைக்கருவிகளை தற்போது இசைக்க, இளைஞர்கள் மத்தியில் ஆர்வம் இல்லை; பல கருவிகள் அழிவின் விளிம்பில் உள்ளன. அந்த பட்டியலில், எக்காளம் எனும் இசைக்கருவியும் இடம்பெற்றுள்ளது.

இந்த கருவி, 6 அடி நீளம், 4 கிலோ எடை கொண்டது. இதை மூன்று பகுதிகளாக தனித்தனியாக, பிரித்து வைத்துக் கொள்ளலாம். முன்பு, போதிய வருவாய் கிடைத்ததால், இதை ஒரு தொழிலாக கொண்டிருந்தனர். காலப்போக்கில் இசைக்க, ஆட்கள் குறைந்து விட்டனர். தற்போது தமிழகத்தில், குறிப்பிட்ட சிலர் மட்டுமே, இசைக்கின்றனர். மேட்டுப்பாளையம் சுந்தரப்பெருமாள்கோவில் பகுதியை சேர்ந்த ருத்திராபதி, 80, ராமன், 56 ஆகியோர் கூறியதாவது: எக்காளம், தாரை, கொம்பு, நமரி, திருச்சின்னம் ஆகிய ஐந்து வாத்தியங்களும், கிராமிய பஞ்ச வாத்தியங்கள். எக்காளத்தை இசைப்பது மிகவும் சிரமம்; மூன்று தலைமுறையாக இசைத்து வருகிறோம். காற்றை முழுமையாக உள்வாங்கிக் கொண்டு, மூச்சை கட்டி அடிவயிற்றில் இருந்து ஊத வேண்டும். இதற்கு முறையான பயிற்சி ஏதும் தேவையில்லை. ஆனால், ஏற்றி, இறக்கி ஊதினால், அதிலிருந்து வெளியேறும் ஓசை, இசையாக மாறும்.

முந்தைய காலத்தில், மன்னர்கள் வீதிகளில் உலா வரும் போது, அவர்களின் வருகையை மக்களுக்கு அறிவிக்கவே, இதை முதலில் ஊதிக் கொண்டு செல்வர். கோவில்களில் சுவாமி திருவீதி உலா செல்லும்போது, முன்பாக ஊதிச் சென்றனர். கோவில் விழாக்களில், அதிக வாய்ப்பு கிடைத்ததால், இதன் வருவாயை வைத்து, குடும்பம் நடத்த முடிந்தது. தற்போது, ஆண்டுக்கு, 10 திருவிழாவுக்கு செல்வதே அதிகம். ஒரு சில கோவில்களில் மட்டுமே, 500, 1000 ரூபாய் என, கூலி கொடுப்பர். மீதமுள்ள கோவில்களில், 250, 300 ரூபாய் தான் கூலியாக கிடைக்கும். இதை வைத்து, குடும்பத் தேவையை பூர்த்தி செய்யாததால், விவசாயக் கூலி வேலைக்கு செல்கிறோம். அதனால், எங்களுடைய குழந்தைகள் இத்தொழிலை செய்ய முன் வரவில்லை. தமிழகம் முழுவதும், அதிகபட்சமாக, 12 பேர் தான் தற்போது இத்தொழிலில் உள்ளனர். இதே நிலை நீடித்தால், இன்னும், 10 ஆண்டுகளில், இந்த இசைக்கருவியை இசைக்க ஆட்கள் இருக்க மாட்டார்கள். இசையும், கலையும் அழிந்து விடும். எனவே, தமிழக அரசு கோவில்களில், இந்த இசையை இசைக்க அனுமதி அளித்தால் மட்டுமே, அழிவிலிருந்து காப்பாற்ற முடியும். இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !