பழநி மலைகோயிலில் நீர் தும்பிகள் தீ விபத்து தடுக்க நடவடிக்கை!
பழநி: தமிழகத்தில் முதன்முதலாக பழநி மலைக்கோயிலில் தீ விபத்தை தடுக்க ரூ.13 லட்சம் செலவில் 12 இடங்களில் “நீர்தும்பிகள்” (வால்வுகள்) அமைக்கும் பணிநடக்கிறது. தமிழகத்தில் அதிக வருமானமுள்ள பழநிமலைக்கோயிலுக்கு விழாக்காலங்கள் மட்டுமின்றி, சாதாரண நாட்களிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். மலைக்கோயில் வெளிப்பிரகாரம், படிப்பாதை, யானைப்பாதையில் சுத்திரிகரிப்பு செய்யப்பட்ட குடிநீர், பசுமை டாய்லெட்கள் அமைக்கப்பட்டுள்ளன பாதுகாப்பு நடவடிக்கைக்காக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் திடீர் தீ விபத்துகளை தடுக்க முன்எச்சரிக்கை நடவடிக்கையாக மலைக்கோயில் வெளிப் பிரகாரத்தை சுற்றிலும் 10அடி உயரத்தில் இரும்புகுழாய்களை பொருத்தி அதில் 12 இடங்களில் நீர்தும்பிகள் அமைக்கும் பணிநடக்கிறது. கோயில் அதிகாரி ஒருவர் கூறுகையில்,“ தைப்பூசம், பங்குனி உத்திரம் போன்ற விழாக்காலங்களில், தீ விபத்தை தடுக்க தீயணைப்புத் துறையினர் மூலம் முன்எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தற்போது விழாக்காலங்கள் மட்டுமின்றி எந்தநேரத்திலும் திடீர் தீ விபத்து ஏற்பட்டால் அதை தடுக்க தீயணைப்பு துறையினர் ஆலோசனையின்பேரில், நிரந்தர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வெளிப்பிரகாரத்தில் இரும்புக் குழாய்களில் தண்ணீர் நிரப்பி, 12 இடங்களில் பிரத்யேகமாக நீர்தும்பிகள் அமைக்கப்படுகிறது.மின்தடைஏற்பட்டாலும் உபயோகப்படுத்தும் விதத்தில் ஜெனரேட்டர் மூலமும் மோட்டாரை இயக்கி திடீர் தீ விபத்தை உடனடியாக கட்டுப்படுத்த முடியும். இதற்கான பணிகளை ஒரு மாதத்திற்குள் முடிக்க திட்டமிட்டு உள்ளோம்,”என்றார்.