இஸ்கான் கோயிலில் தாமோதர தீபத் திருவிழா துவக்கம்!
மதுரை: மதுரை மணிநகரத்திலுள்ள இஸ்கான் ஹரே கிருஷ்ணா கோயிலில் ஒரு மாத கால தாமோதர தீபத் திருவிழா நேற்று (அக்.27) துவங்கியது. விழாவை முன்னிட்டு ஸ்ரீஸ்ரீராதா மதுராபதி தாமோதர தீப அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார்.
வழக்கமான பூஜைகளான, துளசி பூஜை மற்றும் சந்தியாக் கால பூஜையைத் தொடர்ந்து தாமோதர தீப ஆரத்தி நடந்தது. அச்சமயம் ஸ்ரீகிருஷ்ணருக்குப் பிரியமான தாமோதஷ்டக பாடல்கள் பாடப்பட்டன. பின்னர் பக்தர்கள், தங்கள் கரங்களால் நேரடியாக ஸ்ரீஸ்ரீராதா மதுராபதிக்கு நெய் தீப ஆரத்தி காட்டினர். இது விழாவின் சிறப்பம்சமாக அமைந்தது. ஹரே கிருஷ்ண மஹாமந்திர ஜப தியானமும், நரசிம்ம பிரார்த்தனையும் நடைபெற்றது. தொடர்ந்து நடைபெற்ற சிறப்புரையில் விளக்கம் அளிக்கப்பட்டதாவது:
தாமோதரத் திருவிழா உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதன் மூலம் அனைத்து தரப்பு மக்களுக்கும் பகவானை நேரடியாக வழிபடுவதற்கான வாய்ப்பு அளிக்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் அவர்களது மன அமைதிக்கு பெரிதும் இது உதவி புரிகிறது. இதில் ஜபதியானம் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகள் அடங்குவதால் பங்கேற்போர் அனைவரும் பயன்பெறும் வகையில் உள்ளது. இந்நிகழ்ச்சியானது இஸ்கான் ஸ்தாபக ஆச்சாரியர் ஸ்வாமி ஸ்ரீலபிரபுபாதாவின் வழிகாட்டிய படி உலகம் முழுவதும் <<உள்ள இஸ்கான் கோயில்களில் நடைபெறுகிறது. இம்மாதத்தில் பகவான் ஸ்ரீகிருஷ்ணருக்கு தீப ஆரத்தி காட்டி. ஹரே கிருஷ்ண மஹாமந்திரத்தை ஜபம் செய்தால், மனஅமைதியும் மகிழ்ச்சியும் அடையலாம் என்று வேத சாஸ்திரங்கள் உறுதியளிக்கின்றன. விசேஷ திருநாட்களான நவம்பர் 1,8,10, 15, 22, 25 தேதிகளில் சிறப்பு பூஜைகளும் நடைபெறும். தீபாவளி அன்றும், நவ. 25ம் தேதி பவுர்ணமி அன்றும் விசேஷ தீபத் திருவிழா நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.