நாமக்கல் நரசிம்மர் கோவில் உற்சவ விழா: முன்பதிவுக்கு அழைப்பு
நாமக்கல்: நரசிம்மர் ஸ்வாமி கோவிலில், வரும் நவம்பர், 5ம் தேதி முதல், கல்யாண உற்சவ விழாவுக்கு, முன் பதிவு துவங்குகிறது என, கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். நாமக்கல் நகரில் மத்தியில், 200 அடி உயரம் உள்ள குன்றின் மீது அமைந்துள்ள லட்சுமி நரசிம்மர் கோவில் குடைவறைக்கோவிலாகும். பிரசித்தி பெற்ற இக்கோவில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு முக்கிய விஷேச நாட்களில், தமிழகம், வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ஸ்வாமியை தரிசனம் செய்கின்றனர். இந்நிலையில், இந்து அறநிலைத்துறை சார்பில், நாமக்கல் நரசிம்மர் கோவிலில் ஸ்வாமி கல்யாண உற்சவ விழா நேற்று முதல் துவங்கப்பட்டுள்ளது. ஸ்வாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கல்யாண உற்சவ விழா நடத்தினால், திருமணத் தடைநீங்குவதுடன், கல்வி அறிவு வளரும் என்பது ஐதீகம். தினமும், மாலை, 4 மணி முதல், 6 மணி வரை இந்த திருமண உற்சவ விழா நடக்கிறது. அதில் நரசிம்மர் ஸ்ரீதேவி, பூதேவி ஸ்வாமிக்கு திருமண அலங்காலம் செய்யப்பட்டு, சிறப்பு யாக பூஜை நடத்தி, தீபாரதனை செய்யப்படும். இந்த திருமண உற்சவ விழா, வரும் நவம்பர், 5ம் தேதி முதல் முன் பதிவு துவங்குகிறது. பக்தர்கள் முன் பதிவு செய்து, ஸ்வாமியின் அருள் பெறலாம் என, கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.