உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மேலுகோட்டே நரசிம்ம சுவாமி என்ன நாமம்?

மேலுகோட்டே நரசிம்ம சுவாமி என்ன நாமம்?

மேலுகோட்டே: மேலுகோட்டே, யோக நரசிம்ம சுவாமி விக்ரஹத்தின் நெற்றியில், எந்த வடிவில் நாமம் இடுவது என்பது பற்றிய, நுாற்றாண்டு கால விவாதத்துக்கு தீர்வு காணும் பொறுப்பை, அறநிலையத் துறை கமிஷனரிடம் கர்நாடக உயர் நீதிமன்றம் ஒப்படைத்துள்ளது. மேலுகோட்டே யோக நரசிம்ம சுவாமி விக்ரஹத்தின் நெற்றியில் நாமம் இடுவது தொடர்பான விவாதம், நுாற்றாண்டுகளாக நடந்து வருகிறது. வடகலை மற்றும் தென்கலை பிரிவினர், தங்களின் சம்பிரதாயப்படி, நாமம் இட வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். கடந்த, 2008ல், யோக நரசிம்ம சுவாமி விக்ரஹத்துக்கு அணிவித்திருந்த, தங்க நகைகள் திருடு போயின. இந்த சந்தர்ப்பத்தில், விக்ரஹத்தின் நெற்றியிலிருந்த, யு வடிவிலான வெள்ளி நாமமும் திருடு போனது. இதனால், தென்கலை பிரிவினர், தங்கள் சம்பிரதாயத்தின்படி, ஒய் வடிவில் நாமமிடும்படி வலியுறுத்தினர். இதற்கு வடகலை பிரிவினர் ஒப்புக்கொள்ளாததால், குழப்பம் ஏற்பட்டது. இதையடுத்து, மண்டியா மாவட்ட கலெக்டர், சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை நடத்தி, முன்பிருந்ததை போன்றே, யு வடிவிலான நாமத்தையே நீடிக்கும்படி, உத்தரவு பிறப்பித்தார். இதுகுறித்து கேள்வியெழுப்பி, தென்கலை பிரிவினர், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இம்மனுவை விசாரித்த நீதிபதி ஆனந்த் பைர ரெட்டி, யோக நரசிம்ம சுவாமி விக்ரஹத்துக்கு நாமமிடும் விவாதம் குறித்து, வடகலை, தென்கலை பிரிவினரின் வாதத்தை கேட்டறிந்து, சட்ட வல்லுனர்களின் ஆலோசனை பெற்று முடிவு செய்யும்படி, அறநிலையத்துறை கமிஷனருக்கு உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !