பழமையான அமிர்தலிங்கேஸ்வரர் கோவில் புதுப்பிக்க வேண்டுகோள்
வாழப்பாடி: வாழப்பாடி அருகே, பராமரிப்பின்றி பாழடைந்து கிடக்கும் பழமையான அன்னபூரணி அமிர்தலிங்கேஸ்வரர் கோவிலை, புதுப்பித்து குடமுழுக்கு செய்ய, இந்துசமய அறநிலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பக்தர்கள் கோருகின்றனர். வாழப்பாடி அடுத்த, வேப்பிலைப்பட்டியில், 500 ஆண்டு பழமையான அன்னபூரணி அமிர்தலிங்கேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. சிற்ப வேலைப்பாடுடன், கட்டப்பட்டுள்ள இக்கோவில், வசிஷ்ட நதிக்கரையில் அமைந்துள்ள, பிரசித்திபெற்ற பஞ்சபூத சிவன் திருத்தலங்களை ஒத்துள்ளது. பழமையான இக்கோவில், பல ஆண்டுகளாக பராமரிக்கப்படாததால், பாழடைந்து, எந்நேரத்திலும் சரிந்துவிழும் ஆபத்தான நிலையில், ஓட்டுக்கூரை கட்டடம் ஊசலாடுகிறது. கோவில் வளாகத்தில், கால்நடைகள் வளர்ப்பதோடு, சாணம் கொட்டி வைத்து மாட்டுத் தொழுவத்தை போல காட்சியளிக்கிறது. பழமையான வேப்பிலைப்பட்டி அன்னபூரணி அமிர்தலிங்கேஸ்வரர் கோவிலுக்கு, ராஜகோபுரம், மஹா மண்டபம் அமைத்து புதுப்பித்து, குடமுழுக்கு விழா நடத்தவும், பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கவும், இந்து சமய அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டுமென, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.