முனீஸ்வரர் கோவிலில் மண்டலாபிஷேகம்
திருத்தணி:முனீஸ்வரர் கோவிலில், நேற்று, மண்டலாபிஷேக நிறைவு விழாவை ஒட்டி சிறப்பு யாகம் மற்றும் பூஜைகள் நடந்தன.திருத்தணி அடுத்த, நாபளூர் மதுரா குன்னத்துார் கிராமத்தில், கடந்த ஆக., 20ம் தேதி புதிதாக முனீஸ்வரர் கோவில் கட்டி மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து, மண்டலாபிஷேகம் விழா மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்து வந்தது. நேற்று மண்டலாபிஷேக நிறைவு விழாவை ஒட்டி, காலை, 6:30 மணிக்கு கோவில் வளாகத்தில் ஒரு யாகசாலை, 18 கலசங்கள் வைத்து கணபதி ஹோமம், லஷ்மி ஹோமம், சுதர்சன ஹோமம் மற்றும் நவக்கிரக ஹோமம் நடத்தப்பட்டது. தொடர்ந்து காலை, 9:00 மணிக்கு மூலவருக்கு கலச நீர் ஊற்றி சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. தொடர்ந்து திரளான கிராம பெண்கள் கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து வழிபட்டனர். மாலை, 6:00 மணிக்கு, மூலவருக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் ஆன்மிக சொற்பொழிவு நடந்தது. இதில், திருத்தணி, நாபளூர், குன்னத்துார், லட்சுமாபுரம் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.