உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அன்னை காவிரி தீர்த்த ரத யாத்திரை குழுவினர் கூடுதுறையில் வழிபாடு

அன்னை காவிரி தீர்த்த ரத யாத்திரை குழுவினர் கூடுதுறையில் வழிபாடு

பவானி: பவானி கூடுதுறைக்கு, அகில பாரதிய துறவியர் சங்கத்தின் ஐந்தாம் ஆண்டு அன்னை காவிரி தீர்த்த ரத யாத்திரை குழுவினர், நேற்று வந்தனர். இவர்கள், காவிரி அன்னைக்கு ஆராட்டு நடத்தி, சிறப்பு வழிபாடு செய்தனர். அன்னை காவிரி ஏழு புண்ணிய நதிகளில் ஒன்று. ஐப்பசியில் (துலா மாதம்) கங்கை தன்னை புனிதப்படுத்திக் கொள்ள, காவிரியுடன் கலப்பதாக ஐதீகம். இதனால் காவிரி ஆறு மாசுபடக்கூடாது, கழிவு நீர் கலக்க கூடாது, காவிரியை புனிதமாக வைத்திருக்கவும் வேண்டும். இதை வலியுறுத்தி, அகில பாரதிய துறவியர் சங்கத்தினர், கடந்த நான்கு ஆண்டுகளாக, காவேரி தீர்த்த ரத யாத்திரை நடத்தி, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். ஐந்தாவது ஆண்டாக, கர்நாடகா தலைகாவிரியில் இருந்து கடந்த மாதம், 25ம் தேதி, இந்தக் குழுவினர், யாத்திரையை தொடங்கினர். பல்வேறு இடங்களுக்கு சென்றுவிட்டு, கூடுதுறைக்கு இவர்கள் நேற்று வந்தனர். காவிரி அன்னைக்கு ஆற்றங்கரை படித்துறையில் ஆராட்டு நடத்தி, சிறப்பு வழிபாடு செய்தனர். இந்த யாத்திரையின் முக்கிய நோக்கமே, காவிரி ஆறு, கரைப்பகுதிகளில் மற்றும் நீர் நிலைகளில் குப்பை கூளம், பழைய துணிகள், பாலித்தீன் போடுவதும், கொட்டுவது, ஆலைக்கழிவுகளை கலக்கவிடுவது பாவச் செயல் என்பதை உணர வைத்தலே ஆகும். இதை வலியுறுத்தி, மக்களிடம் துண்டுப் பிரசுரங்களும் வழங்கப்பட்டது. யாத்திரையில், நாகேஸ்வரா நந்தி சரஸ்வதி சுவாமிகள் தலைமையில், 20க்கும் மேற்பட்ட துறவியர்கள் கலந்து கொண்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !