மேல்மலையனூர் கும்பாபிஷேக விழா:கலெக்டர் தலைமையில் ஆலோசனை
செஞ்சி: மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலுக்கு மகா கும்பாபிஷேகம் நடத்துவது குறித்து, கலெக்டர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலுக்கு, இம்மாதம் 18ம் தேதியன்று, மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட உள்ளது. இதற்காக, யாகசாலை பூஜைகள், வரும் 15ம் தேதியன்று துவங்குகிறது.கும்பாபிஷேக விழாவுக்கு வருகை தருகின்ற பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள், போக்குவரத்து வசதிகளை செய்து தருவது தொடர்பான ஆலோசனை கூட்டம், மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நடந்தது. கூட்டத்திற்கு, கலெக்டர் லட்சுமி தலைமை தாங்கினார். திண்டிவனம் சப் -கலெக்டர் ஸ்ரீதர், இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் வாசுநாதன் முன்னிலை வகித்தனர். உதவி ஆணையர்கள் பிரகாஷ், மோகனசுந்தரம், தாசில்தார் பூமிநாதன், டி.எஸ்.பி., முரளிதரன், நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் ராஜகணபதி, மின்வாரிய செயற்பொறியாளர் குணசேகரன் ஆகியோர் பேசினர்.ஊராட்சி தலைவர் உண்ணாமலை, துணைத் தலைவர் பரமசிவம், பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள், அறங்காவலர்கள்உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், பக்தர்கள் வந்து செல்வதற்கான சாலைகளை முடிவு செய்து, அதில் உள்ள குறைகளை சரி செய்யவும், குடிநீர், கழிவறை, மருத்துவம், மின்விளக்கு வசதிகளை செய்வது குறித்தும் விரிவான ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.