மீனாட்சியம்மன் கோயில், வண்டியூர் கண்மாய் பகுதிகள் அழகாகிறது!
மதுரை : மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில், மதுரை மீனாட்சி அம்மன் கோயில் பகுதி
மற்றும் வண்டியூர் கண்மாய் சுற்றுப்பகுதிகளில் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவது
தொடர்பாக ஆலோசனை நடந்து வருகிறது.
நகர்புற உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்காக ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில், மதுரைக்கு 5
ஆண்டுகளில் மத்திய அரசு ரூ.500 கோடி, மாநில அரசு ரூ.500 கோடியில் பணிகளை நடத்த
உள்ளது. எந்த பணிகளுக்கு முன்னுரிமை அளிப்பது குறித்து பொதுமக்களிடம் வாக்கெடுப்பு
நடந்தது. இதன் அடிப்படையில், பல துறை அதிகாரிகளிடம் ஆலோசனை கேட்கப்பட்டது.
முதற்கட்டமாக, மீனாட்சி அம்மன் கோயில், சுற்றுப்பகுதியில் அடிப்படை கட்டமைப்பு,
போக்குவரத்து நெரிசலை குறைத்தல் மற்றும் பகுதி மேம்பாட்டு பணிகளை நடத்த
திட்டமிடப்பட்டுள்ளது.
எந்த இடங்களில் நடைபாதை அமைப்பது, பாதைகளை அழகுபடுத்துவது குறித்து அதிகாரிகளிடமும் கருத்து கேட்கப்பட்டது. இதே போன்று, வண்டியூர் கண்மாய் மற்றும்
சுற்றுப்பகுதிகளில் மேம்பாடு பணிகளை செய்ய அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் மதுரையில் எந்தெந்த
இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன என்பது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும்.
தற்போதையை நிலையில், மீனாட்சிஅம்மன் கோயில், வண்டியூர் கண்மாய் பகுதிகளை
மேம்படுத்துவதற்கான ஆயத்த பணிகளை துவக்கி உள்ளோம்.
இப்பகுதிகளில் எந்த பணிகளை செய்வது என்பது குறித்த திட்ட அறிக்கைகளும் தயார் செய்யப்பட்டுள்ளன. பிற துறை அதிகாரிகளின் ஆலோசனைபடி, இப்பகுதியில் புதிய திட்டங்களும் இணைத்து கொள்ளப்படும். இத்திட்டங்களால் மீனாட்சி அம்மன் கோயில், வண்டியூர் கண்மாய் பகுதிகள் அழகுபெறும், என்றனர்.