உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சதுரகிரி மலையில் ஆடி அமாவாசை விழா

சதுரகிரி மலையில் ஆடி அமாவாசை விழா

துவங்கியது அமாவாசை விழா களை கட்டியது சதுரகிரி மலை : மொட்டைக்கு அடாவடி வசூல்

வத்திராயிருப்பு : சதுரகிரி மலையில் ஆடி அமாவாசை விழா நேற்று துவங்கியது. பல்வேறு மாநில பக்தர்கள் மற்றும் சாதுக்களும் மலையில் முகாமிட்டுள்ளனர். மலையடிவாரத்தில் மொட்டையிட அடாவடி வசூலும் நடக்கிறது. சிவஸ்தலமான சதுரகிரி மலை கோயிலில் பிரசித்திபெற்ற ஆடி அமாவாசை விழா நேற்று துவங்கியது. காலையில் சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம், சுந்தரமூர்த்தி, பிலாவடி கருப்பசுவாமி கோயில்களில் சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள், சங்கொலி பூஜைகள் நடந்தன. மாலையில் பிரதோஷ பூஜைகளும் நடந்தன. இதையொட்டி நந்தீஸ்வரர், மூலவர்களுக்கு வில்வ இலை அர்ச்சனை வழிபாடு , சந்தனக்காப்பும் நடந்தது. விழாவையொட்டி, கடந்த ஒருவாரமாகவே பக்தர்கள் மலைக்கு வந்தவண்ணம் இருந்தனர். நேற்று விழா துவங்கியதால் பக்தர்கள் கூட்டம் அதிகரித்தது. மலையடிவாரமான தாணிப்பாறை, மந்தித்தோப்பு, மாவூத்து மற்றும் அதன் சுற்றுப்பகுதி வயல்வெளிகள், தோப்புகளில் கூடாரம் அமைத்து, பக்தர்கள் தங்கியுள்ளனர். மலையடிவாரத்தில் சிறப்பு பஸ்கள் வந்து சென்றதாலும், தனியார் வாகனங்கள் முகாமிட்டதாலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இன்றும், நாளையும் பக்தர்கள் அதிகம் வருவார்கள் என்பதால், நெரிசலை தவிர்க்கும் வகையில், போக்குவரத்துபோலீசார் தனி கவனம் செலுத்த வேண்டும். மலைஅடிவாரத்தில் மொட்டையிடும் பக்தர்களிடம் "வழக்கம்போல் 100, 150 ரூபாய் என அடாவடி வசூல் தொடங்கியது. மலை நுழைவு வாயிலில் பக்தர்களை சோதனை செய்யும் வனத்துறையினர், பாலித்தீன், பீடி, சிகரெட், தீப்பெட்டிகளை பறிமுதல் செய்து வருகின்றனர். மலைக்கு செல்லும் பக்தர்கள் இவற்றை தவிர்ப்பது நல்லது. வாகனங்களில் வருவோர் சற்று தொலைவிலே நிறுத்தி சென்றால், ஊர்திரும்பும்போது எளிதாக வாகனத்தை எடுத்து செல்ல வசதியாக இருக்கும். விழாவையொட்டி, இன்று மாலை 6 மணி முதல் இரவு முழுவதும் மலையில் சிவராத்திரி சிறப்பு பூஜைகள், சிறப்பு நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

சதுரகிரி மலை பாதைகளில் கடைகள் : மலையேறுவதில் பக்தர்கள் சிரமம்

மலை பாதைகளில் ஏராளமான கடைகள் அமைக்கப்பட்டதால் பக்தர்கள் சிரமம் அடைகின்றனர். சதுரகிரி மலையில் இன்று நடக்கும் ஆடி அமாவாசை விழா ல் கலந்து கொள்வதற்காக கடந்த ஒருவாரமாகவே பக்தர்கள், சாதுக்கள் மலைக்கு வந்தவண்ணம் இருந்தனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான அமாவாசை வழிபாடு இன்று காலையில் துவங்குகிறது. இதனால் நேற்று பக்தர்களின் வருகை மிக அதிகளவில் இருந்தது. வனப்பகுதிக்குள் நுழையும் பக்தர்களிடம் தொண்டு நிறுவனங்கள் உதவியுடன் வனத்துறையினர், பாலித்தீன், பீடி, சிகரெட், மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதையறிந்த சிலர் கூல்டிரிங்ஸ் உடன் மதுவை கலந்து கொண்டு சென்றனர். அதையும் பறிமுதல் செய்தனர். அடிவாரம் முதல் மலை உச்சியில் கோயில் வளாகம் வரை நடைபாதைகளில் கடைகள் அமைக்க வனத்துறையினர் தடை விதித்தனர். ஆனால், மாங்கேனி, அத்தியூத்து, கோணத்தலைவாசல், காராம்பசுத்தடம், கோரக்க நாதர்குகை, சின்னப்பசுக்கிடை, நாவல்ஊற்று, இரட்டைலிங்கம் கோயில் ஆகிய இடங்களில் மிக குறுகிய பாதைகளில் அதிக கடைகள் அமைக்கப்பட்டு இருந்ததால், இடங்களில் மலை ஏறுபவர்களும், இறங்குபவர்களும் சிரமப்பட்டனர். இந்த இடங்களில் இன்று லட்கணக்கான பக்தர்கள் வர உள்ளதால் கடைகளை அகற்றுவது மிக அவசியம். அத்துடன் கூடுதல் போலீஸ் பாதுகாப்பும் தேவை. மலை உச்சியில் கழிப்பறை வசதிகள் இல்லாததால் கோயில் வளாகத்திலிருந்து வெள்ளைப்பாறை மடம் வரை நடைபாதை முழுவதும் பக்தர்கள் மலஜலம் கழித்து அசுத்தப்படுத்திஉள்ளனர். அந்த இடத்தை மூக்கைப்பிடித்தபடி பக்தர்கள் கடந்து சென்றனர். கோயில் விழா ஏற்பாடுகளை சென்னை அறநிலையத்துறை ஆணையர் முத்தையா கலைவாணன், மதுரை இணை ஆணையர் சுதர்சன், உதவி ஆணையர் வில்வமூர்த்தி ஆய்வு செய்தனர். நேற்று விசேஷ அலங்காரத்தில் சுந்தரமகாலிங்கம், சந்தனமகாலிங்கம் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். மாலையில் சிவராத்திரி வழிபாடு துவங்கியதும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.

பாக்ஸ்:வனப்பகுதிக்குள் வரிவசூலித்த ஊராட்சிசதுரகிரிமலையில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் ஏராளமானோர் அத்துமீறி நடைபாதைக்கடை அமைத்திருந்தனர். இதை வனத்துறையினர் அகற்ற முற்பட்டனர். ஆனால், அக்கடைகளை அங்கீகரித்து 50 ரூபாய் வீதம் சாப்டூர் ஊராட்சியை சேர்ந்தவர்கள் உரிமக்கட்டணம் வசூலித்தனர். இதனால், சில கடைக்காரர்கள் கடையை காலிசெய்ய மறுத்து தகராறு செய்தனர். யார் இடத்திற்கு யார் வரிவசூலிப்பது என்ற அடிப்படை தெரியாமல் பணம் வசூலிப்பதிலேயே ஊராட்சி நிர்வாகம் குறியாக இருந்தது. அடிப்படை வசதிகள் எதையும் செய்துதரவில்லை. இது ஒருபுறம் இருக்க, மலைப்பாதையில் டியூப்லைட் வசதி செய்து தருவதற்காக கோயில் நிர்வாகத்தில் டெண்டர் எடுத்தவர்கள், அந்த டியூப்லைட்டுகளை நடைபாதை கடைகளுக்கு முன்பாக கட்டி ஒவ்வொரு கடைக்காரர்களிடமும் 50 ரூபாய் வீதம் வசூலித்தனர். ஆளாளுக்கு போட்டி போட்டு வசூலித்தும் கடை காலிசெய்யப்பட்டதால் அவர்கள் கண்ணீருடன் வெளியேறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !