சென்னிமலை கோவிலில் யாக சாலை பூஜையுடன் சஷ்டி விழா ஆரம்பம்
சென்னிமலை: சென்னிமலை முருகன் கோவிலில், கந்த சஷ்டி விழா நேற்று, யாக சாலை பூஜையுடன் தொடங்கியது. கந்த சஷ்டி கவசம் அரங்கேற்றம் செய்யப்பட்ட, சென்னிமலை முருகன் கோவிலில், கந்த சஷ்டி விழா, நேற்று தொடங்கியது. விழாவை முன்னிட்டு, காலை, 6.30 மணிக்கு மேல், சென்னிமலை கைலாசநாதர் கோவிலில் இருந்து, உற்சவமூர்த்திகளை, 1,320 படிக்கட்டுகள் வழியாக, முருகன் கோவிலுக்கு எடுத்துச் சென்றனர். அங்கு அமைக்கப்பட்டிருந்த, யாக சாலையில், பால், தயிர், நெய், பன்னீர், தேன், சந்தனம் உட்பட, 108 வகையான திரவியங்களுடன் அபி?ஷகம், சிறப்பு ஹோமங்கள் நடத்தப்பட்டன. பிறகு சிறப்பு அலங்காரமும், மகா தீபாராதனையும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதை தொடர்ந்து, பல பக்தர்கள், தங்களது ஆறு நாள், விரதத்தை தொடங்கினர். கந்த சஷ்டி விழா, வரும், 17ம் தேதி வரை நடக்கிறது. இதையொட்டி, காலை, 9.30 மணி முதல், பகல் 12 மணி வரை, சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெறுகிறது. பக்தர்களின் வசதிக்காக, விழா நடைபெறும் நாட்களில், அடிவாரத்தில் இருந்து, மலை கோவிலுக்கு, பஸ் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.