பெரியகுளம் பால சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழா!
பெரியகுளம்: பெரியகுளம் பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தர் சஷ்டி விழா துவங்கியது. பெரியகுளத்தில் உள்ள பாலசுப்பிரமணியசுவாமி கோயில், தமிழகத்தின் சைவம் வளர்த்த வரலாற்றுச் சிறப்புமிக்கது. இங்கு சுப்பிரமணியர் (முருகன்), ராஜேந்திர சோழீஸ்வரர் (சிவன்), அறம்வளர்த்த நாயகி (அம்பாள்) ஆகிய 3 சந்நிதிகளும் ஒரே நேர்கோட்டில் அமைந்து இருப்பது சிறப்பாகும். ஒவ்வொரு சந்நிதிக்கும் தனித்தனியாக 3 கொடி மரங்கள் உள்ளன. ராஜகோபுரம் கட்டும் பணி நடந்து வருகிறது. இக்கோயிலில் நேற்று சஷ்டி விழா துவங்கியது. இதையொட்டி மூலவர் பாலசுப்பிரமணியருக்கு அர்ச்சகர் கார்த்திக் சிறப்பு பூஜைகள் செய்தார். உற்சவருக்கும், கொடி மரங்களுக்கும் அபிஷேகங்கள் நடந்தன. பக்தர்கள் கந்த சஷ்டி கவசம் பாடினர். நவ.,17 ல் சூரசம்ஹாரமும், மறுநாள் திருக்கல்யாணமும் நடக்கிறது. விழாவையொட்டி பெரியகுளம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஆண், பெண் பக்தர்கள், 6 நாள் விரதம் மேற்கொண்டு உள்ளனர். ஏற்பாடுகளை கோயில்நிர்வாகம் மற்றும் மண்டகப்படிதாரர்கள் செய்து வருகின்றனர்.