உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அமெரிக்காவில் பிரம்மாண்ட மீனாட்சி அம்மன் கோவில்: 29ம் தேதி கும்பாபிஷேகம்!

அமெரிக்காவில் பிரம்மாண்ட மீனாட்சி அம்மன் கோவில்: 29ம் தேதி கும்பாபிஷேகம்!

ஹியூஸ்டன்: அமெரிக்காவில் ஹியூஸ்டன் மாநகரில் உள்ள மீனாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா, வரும், 29ம் தேதி நடக்க உள்ளது. அமெரிக்காவின் ஹியூஸ்டன் மாநகரில், மீனாட்சி திருக்கோவில், 1977 அக்டோபரில் கட்டப்பட்டது. உலகளவில் உள்ள சிறந்த கோவில்களில், இக்கோவில், 64ம் இடத்தை பெற்றுள்ளது. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை அடிப்படையாகக் கொண்டு கட்டப்பட்ட இக்கோவிலில், 1982ல் மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. மீண்டும், 2013ல், விநாயகர் கோவில் விரிவுப்படுத்தப்பட்டு, கும்பாபிஷேகம் நடந்தது. மேலும், 30 ஏக்கர் நிலத்தில் அமைந்துள்ள இக்கோவிலில், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக, தமிழக அரசின் தலைமை ஸ்தபதி முத்தையா ஆலோசனைபடி, 10 கோடி ரூபாய் செலவில், திருப்பணி நடந்து வருகிறது. இந்நிலையில், வரும், 29ம் தேதி, 10:00 மணிக்கு, இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடத்தப்பட உள்ளது. இதை முன்னிட்டு, 22ம் தேதி முதல், யாக சாலை பூஜைகள் நடைபெற உள்ளன. இத்தகவல்களை தெரிவித்த, மதுரை, தியாகராசர் கல்லுாரி முன்னாள் பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் கூறியதாவது: கடந்த, 2005ல், அமெரிக்க தமிழ் சங்கங்களின் கூட்டமைப்பான, ‘பெட்னா’வின் அழைப்பில், டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள டாலஸ் நகரத்திற்கு சென்று உரையாற்றும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது, ஹியூஸ்டன் நகரத்தில் உள்ள மீனாட்சியம்மன் கோவிலில் பேச, என்னை அழைத்தனர். அமெரிக்க இந்து கோவில்களில், கோவிலோடு இணைந்த அற்புதமான நுாலகமும், நுாலகத்தில் அரங்கங்களும் உண்டு. இந்த அரங்கங்களில், 300 – 500 பேர் வரை அமரலாம். உட்பிரகாரத்தின் நெடிய மரக் கதவுகளை திறந்த போது, கர்ப்பகிரகத்தில் காட்சி தந்த மரகத வள்ளியாகிய மீனாட்சியம்மனின் வடிவத்தைக் கண்டு, மதுரையில் தான் இருக்கிறோமோ என, ஒருகணம் மயங்கினேன். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !