உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருச்செந்தூர் முருகன் கோயிலில் கந்த சஷ்டி 3 ம் நாள் விழா! நவ., 17 ல் சூரசம்ஹாரம்

திருச்செந்தூர் முருகன் கோயிலில் கந்த சஷ்டி 3 ம் நாள் விழா! நவ., 17 ல் சூரசம்ஹாரம்

தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயிலில் கந்தசஷ்டி விழா நவ., 12 ல் யாகசாலை பூஜையுடன் துவங்கியது. நவ., 17ல் சூர சம்ஹாரம் நடக்கிறது. விழாவின் 3 ம் நாளான நவ., 13 ல் தங்க சப்பரத்தில் எழுந்தருளிய ஜெயந்திநாதரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். முருகனின் இரண்டாம் படை வீடு திருச்செந்தூர். இங்கு முருகபெருமான் சூரனை சம்ஹாரம் செய்து, சிவ பெருமானை வழிபட்ட புகழ் பெற்ற திருத்தலமாகும். இந் நிகழ்ச்சியினை காண உலகம் முழுவதும் இருந்து பக்தர்கள் வருகை தருவார்கள். கந்தசஷ்டி விழா நவ., 12 ல் துவங்கியது.

தங்க சப்பரம்:
விழா நாட்களில் தினமும் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்படும். ஜெயந்திநாதர் காலை 8 மணிக்கு யாக சாலையில் எழுந்தருளுவார். அங்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடக்கும்.பின் தங்கசப்பரத்தில் எழுந்தருளுகிறார். நவ., 13, காலை யாகசாலையில் எழுந்தருளிய ஜெயந்தி நாதருக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடந்தது. பின் வீர வாள் வகுப்பு, வேல் வகுப்பு பாடல்களுடன், சண்முகவிலாச மண்டபத்தில் மதியம் 12.30 மணிக்கு எழுந்தருளினார். பின் ஜெயந்தி நாதர் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. இதனை தரிசிக்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்தனர். மாலை 4 மணிக்கு ஜெயந்திநாதர் தங்க ரதத்தில் எழுந்தருளி கிரி வீதி வலம் வந்து இரவு கோயில் வந்து சேர்ந்தார்.

சூரசம்ஹாரம்:
நவ.,17 ல் அதிகாலை ஒரு மணிக்கு கோயில் நடை திறக்கப்படும். மாலை 4.30 மணிக்கு கடற்கரையில் சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடக்கிறது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரளுவார்கள். நவ., 18 மாலை 5.30 மணிக்கு முருகனுக்கு திருக்கல்யாணம் நடக்கவுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !