1,000 ஆண்டு ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு பூஜை
சேலம்: சேலம், அயோத்தியாப்பட்டணத்தில் உள்ள, 1,000 ஆண்டு நந்தவன ஆஞ்சநேயர் கோவிலில், மூல நட்சத்திர நாளை முன்னிட்டு, நேற்று சிறப்பு பூஜை நடந்தது. அயோத்தியாப்பட்டணம் ராமர் கோவிலை சேர்ந்தது, நந்தவன ஆஞ்சநேயர் கோவில். ராமர் கோவிலில் இருந்து, 600 மீட்டர் தொலைவில் இக்கோவில் உள்ளது. ஆஞ்சநேயர் ராமரையும், சீதாதேவியையும் தரிசிப்பது போல் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு, ஒவ்வொரு மாதமும், மூல நட்சத்திர தினத்தன்று, ஆஞ்சநேயருக்கு அபிஷேகம் செய்து அன்னதானம் வழங்கப்படுகிறது. நேற்று நடந்த பூஜையில், திரளாக பக்தர்கள் கலந்துகொண்டனர். பின்னர், பக்தர்கள் கூறியதாவது: திருமணம் மற்றும் சுப காரியங்கள் நடைபெறுவதில் காலதாமதம் ஏற்படுவோர், ஆஞ்சநேயருக்கு நடைபெறும் மூல நட்சத்திர பூஜையில் கலந்துகொண்டால், 3 முதல், 6 மாதங்களுக்குள் திருமணம் நடைபெறும். மேலும், ஒவ்வொரு மாதமும், அமாவாசை அன்று நடைபெறும் பூஜையில் கலந்து கொள்வதால், சனி திசை மற்றும் கிரகங்களின் மாற்றத்தினால் வரும் பாதிப்பில் இருந்து, நம்மை காப்பதாகவும் கூறுகின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.