புதுச்சேரியில் அறுபடை முருகன் திருக்கல்யாண உற்சவம்!
புதுச்சேரி: புதுச்சேரியில் அறுபடை முருகன், வள்ளி, தெய்வானை திருக்கல்யாண உற்சவம் நேற்று நடந்தது. புதுச்சேரி அறுபடை முருக பக்தர்கள் மற்றும் அறுபடை முருகன் டிரஸ்ட் சார்பில், திருப்பரங்குன்றம், திருச்செந்துார், பழநி, சுவாமிமலை, பழமுதிர் சோலை, திருத்தணி ஆகிய அறுபடை முருகப் பெருமான் சுவாமிகளுக்கு, ஒரே நேரத்தில் திருக்கல்யாண உற்சவம், லாஸ்பேட்டை ஹெலிபேட் மைதானத்தில் நேற்று நடந்தது. இதையொட்டி நேற்று காலை 9:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, சத்ரு சம்கார ஹோமம், மகா தீபாராதனை நடந்தது. மாலை 4:05 நலங்கு வைபவமும், சீர்வரிசை வருதல், காசி யாத்திரை, மாலை மாற்றுதல், ஊஞ்சல் உற்சவம் நடந்தது. மாலை 6:30 மணிக்கு, திருமாங்கல்ய தாரணம், மகா தீபாராதனை நடந்தது. நேற்று தொடர்ந்து மழை பெய்தாலும், கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல், பக்தர்கள் குடையுடன் காத்திருந்து, திருக்கல்யாணத்தை கண்டு, சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர். நலத்துறை அமைச்சர் ராஜவேலு, லட்சுமிநாராய ணன் எம்.எல்.ஏ., கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை, அறுபடை முருக பக்தர்கள், அறுபடை முருகன் டிரஸ்ட் நிர்வாகிகள் செய்திருந்தனர்.