உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவண்ணாமலையில் மஹா தீபம்

திருவண்ணாமலையில் மஹா தீபம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில் நேற்று மஹா தீபம் ஏற்றப்பட்டது. லட்சக்கணக்கான பக்தர்கள், அண்ணாமலையாருக்கு அரோகரா கோஷத்துடன் தீப தரிசனம் கண்டு வழிபட்டனர்.திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா, கடந்த 16ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. முக்கிய விழாவான கார்த்திகை மஹா தீபம் நேற்று மலை உச்சியில் ஏற்றப்பட்டது. இதை முன்னிட்டு அதிகாலை 2 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. விநாயகர், முருகர், அண்ணாமலையார், உண்ணாமுலையம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை செய்யப்பட்டன.பஞ்ச பூதங்களை குறிக்கும் வகையில் அண்ணாமலையார் மூல கருவறை எதிரில் ஐந்து மடக்குகளில் தீபம் ஏற்றப்பட்டு, அதிகாலை 4 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்பட்டது. இதை தொடர்ந்து அம்மன் கோவில் கருவறையில் ஐந்து அகல் விளக்குகள் ஏற்றப்பட்டன. பின் அனைத்து சன்னிதிகளிலும் தீபங்கள் ஏற்றப்பட்டன.

இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று பரணி தீப தரிசனம் செய்து வழிபட்டனர்.தெய்வங்களின் திருஉருவச் சிலைகள், தங்க கொடி மரத்தின் முன், தீப தரிசன மண்டபத்தில் எழுந்தருளச் செய்விக்கப்பட்டன. மாலை 5:59 மணிக்கு, தங்க கொடி மரம் முன் அர்த்தநாரீஸ்வரர் எழுந்தருளி, நடனமாடியவாறு பக்தர்களுக்கு காட்சியளித்தார். அப்போது காலையில் சுவாமி சன்னிதியில் ஏற்றப்பட்ட பரணி தீபத்தின் ஐந்து அகல் விளக்குகளையும் உடன் கொண்டு வந்து கொடி மரம் முன்பாக உள்ள அகண்டத்தில் ஒன்று சேர்க்கப்பட்டது. பின்னர் பஞ்ச பூதங்களை குறிக்கும் விதத்தில் ஐந்து தீப்பந்தங்கள் ஏற்றப்பட்டு, அவை மலை உச்சியில் உள்ளவர்களுக்கு தெரியும்படி காண்பிக்கப்பட்டது. இதையடுத்து மாலை 6 மணிக்கு, 2,668 அடி உயர மலை உச்சியில் மஹா தீபம் ஏற்றப்பட்டது. இந்த தீபம் 11 நாள் தொடர்ந்து எரியும். திருவண்ணாமலையில் இருந்து, 40 கி.மீ., துாரம் வரை தீபம் எரிவது தெரியும். இதனால் 40 கி.மீ., துாரம் வரை உள்ள சுற்றுப்பகுதி மக்கள் தங்கள் பகுதியில் இருந்தவாறே தீபத்தை கண்டு வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !