ராமேஸ்வரம் பக்தர்கள் பறிகொடுத்த ரயில்கள்
ராமேஸ்வரம்: பக்தர்களுக்காக இயக்கப்பட்டு, அகல பாதை பணிக்காக நிறுத்தப்பட்ட பல ரயில்கள் மீண்டும் துவங்கப்படாமல் கிடப்பில் உள்ளன. பல ஆண்டுகளாக புதிய ரயில்களும் அறிவிக்கப்படாததால் பக்தர்கள் மட்டுமின்றி ராமநாதபுரம் மாவட்ட மக்களும் பஸ்களையே அதிகம் நம்பி இருக்க வேண்டியுள்ளது. ராமேஸ்வரம் வழிதடத்தில் வாராந்திர ரயில்களை தவிர்த்து, தினமும் 14 ரயில்கள் இயக்கப்படுகின்றன. ராமேஸ்வரத்திற்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலம், வெளிநாட்டு பயணிகள் அதிகளவில் வந்து செல்கின்றனர். இவர்கள் வசதிக்காக ராமேஸ்வரத்தில் இருந்து பாலக்காட்டிற்கு காலை 7:30 மணி, மாலை 4:30, இரவு 10:30 மணி ஆகிய 3 நேரங்களில் பயணிகள் ரயில் இயக்கப்பட்டது. இதன்மூலம் கேரள பக்தர்கள் ஏர்வாடி தர்ஹா, ராமேஸ்வரம் வர ஏதுவாக இருந்தது. அதேபோல் ராமநாதபுரம் மக்கள் பழநி, பொள்ளாச்சி, பாலக்காடு செல்ல உதவியாக இருந்தது.
ராமேஸ்வரத்தில் இருந்து காலை 7:30 மணிக்கும், மதுரையில் இருந்து ராமேஸ்வரத்திற்கு மாலை 4 மணிக்கும் தினமும் "ஸ்கூல் ரயில் இயக்கப்பட்டது. இந்த ரயிலில் ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம், தங்கச்சிமடம், உச்சிப்புளி மாணவர்கள், கூலித் தொழிலாளர்கள் ராமநாதபுரம், பரமக்குடி, மதுரைக்கு செல்ல வசதியாக இருந்தது. ராமேஸ்வரம்-திருச்சி, ராமேஸ்வரம்-கோவை இடையே தினமும் ரயில்கள் இயக்கப்பட்டன. இந்த 4 ரயில்களும் அகல பாதை பணிக்காக 2007 ல் நிறுத்தப்பட்டன. ராமேஸ்வரம்-மதுரை, ராமேஸ்வரம்-திருச்சி இடையே அகல பாதை பணி முடிந்து பல ஆண்டுகளாகியும் நிறுத்தப்பட்ட ரயில்கள் இயக்கப்படவில்லை. மேலும் கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் ராமநாதபுரம் வழியாக புதிய ரயில் பாதை திட்டம் கனவாக உள்ளது. அன்வர்ராஜா எம்.பி., கூறியதாவது: அப்துல்கலாம் நினைவிடத்திற்கு செல்லும் வகையில் தங்கச்சிமடத்தில் மீண்டும் ரயில் நிலையத்தை அமைக்க வேண்டும். சென்னையில் மாலை 5 மணிக்கு புறப்படும் சேது எக்ஸ்பிரசை மயிலாடுதுறை, தஞ்சாவூர் வழியாகவும், இரவு 9:40 மணிக்கு புறப்படும் ராமேஸ்வரம் எக்ஸ்பிரசை விருத்தாச்சலம், அரியலூர் வழியாக இயக்கினால் சரியான நேரத்திற்கு பரமக்குடி, ராமநாதபுரத்திற்கு வந்து சேரும்.
மானாமதுரை-மன்னார்குடி ரயிலை இணைக்கும் வகையில் ராமேஸ்வரத்தில் இருந்து புறப்படும் மதுரை பயணிகள் ரயிலை பகல் 11:15 க்கு மாற்ற வேண்டும். கிழக்கு கடற்கரை சாலை வழித்தடத்தில் புதிய ரயில் பாதை அமைக்க வேண்டும். திருச்சி, மதுரை வரை வரும் ரயில்களை ராமேஸ்வரம் நீட்டிக்க வேண்டும். இதில் பல கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக தென்னக ரயில்வே பொதுமேலாளர் உறுதியளித்துள்ளார், என்றார்.
கிடைக்கும் என்பார் ஆனால் கிடைக்காது: ராமநாதபுரம் வர்த்தகர்கள் சங்கத் தலைவர் ஜெகதீசன் கூறியதாவது: அப்துல்கலாம் கனவான சென்னைக்கு பகல் நேர ரயிலாக பாம்பன் எக்ஸ்பிரசை இயக்க வேண்டும். பாலக்காடு வரை அகல பாதை துவங்கிய நிலையில், ராமேஸ்வரம்-பாலக்காடு ரயிலை மீண்டும் இயக்க வேண்டும். பழனி, ராமேஸ்வரம் புனித ஸ்தலங்களை இயக்கும் வகையில் புதிய ரயில் இயக்க வேண்டும். மானாமதுரை வரை இயக்கப்படும் சிலம்பு எக்ஸ்பிரசை ராமேஸ்வரம் வரை நீட்டிக்க வேண்டும். வடமாநில பக்தர்கள் அதிகளவில் ராமேஸ்வரம் வருகின்றனர். அவர்கள் வசதிக்காக சென்னை வரை இயக்கப்படும் அனைத்து வடமாநில ரயில்களையும் ராமேஸ்வரம் வரை நீட்டிக்க வேண்டும். எங்களது கோரிக்கைகளை ஒவ்வொரு முறையும் நிறைவேற்றுவதாக ரயில்வே அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால் செயல்படுத்தாமல் அப்படியே விட்டுவிடுகின்றனர், என்றார்.
பட்ஜெட்டில் நிறைவேறும்: ரயில்வே அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஒருசில ரயில்கள் விரைவில் ராமேஸ்வரம் வரை நீட்டிக்கப்பட உள்ளன. ஊழியர்கள் மற்றும் இன்ஜின், பெட்டிகள் பற்றாக்குறையால் புதிய ரயில்களை இயக்குவதில் சிக்கல் உள்ளது. பற்றாக்குறையை சரிசெய்யும் நடவடிக்கையில் ரயில்வே நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. அடுத்த பட்ஜெட்டில் நிறுத்தப்பட்ட ரயில்களை இயக்க வாய்ப்புள்ளது, என்றார்.