தூய பனிமய மாதா பேராலய விழாவில் சமூகப் பணியாளர்களுக்கு சிறப்பு திருப்பலி
தூத்துக்குடி : தூய பனிமய மாதா பேராலயத் பெருவிழாவில் நேற்று சமூக பணியாளர்களுக்கான சிறப்பு திருப்பலி நடந்தது.தென்னிந்தியாவில் புகழ்பெற்ற தூத்துக்குடி தூய பனிமய மாதா ஆலயத்தின் பேராலய பெருவிழா கடந்த 26ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. ஒவ்வொரு நாளும் சிறப்பு திருப்பலிகள், மறையுரை போன்ற பல நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. பெருவிழாவை முன்னிட்டு மாதா ஆலயம் அமைந்துள்ள பீச் ரோட்டில் ஏராளமான திருவிழா கடைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதேபோல் பொரு ட்காட்சியும் நடந்து வருகிறது. இதனை காண தினந்தோறும் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானவர்கள் வருகைபுரிவதால் தூத்துக்குடி மாநகரமே களைகட்டியுள்ளது. பெருவிழாவின் 7ம் நாள் நிகழ்ச்சியாக நேற்று மறைமாவட்ட ஆசன ஆலய பங்கு இறைமக்கள், திரேஸ்புரம் பங்கு இறைமக்கள், சலேசிய துறவிகள், நற்செய்தி பணியாளர்கள் மற்றும் சமூகப் பணியாளர்களுக்கான சிறப்பு திருப்பலி நடந்தது. இன்று காலை குரூஸ்புரம் பங்கு இறைமக்கள்,அன்னாள் சபை கன்னியர்கள், கால்டுவெல் காலனி பங்கு இறைமக்கள், தாளமுத்துநகர் பங்கு இறைமக்கள்,நகர துறவறத்தார் மற்றும் முத்துநகர் மரியாயின் சேனையாளர்களுக்கான சிறப்பு திருப்பலியும் நடக்கிறது. இரவில் திருச்சி மறைமாவட்டம் சகாய அன்னை திருத்தல பேராலயத்தை சேர்ந்த லூயிஸ் பிரிட்டோர் "கிறிஸ்தவர்களின் சகாயம் என்ற தலைப்பில் மறையுறையாற்றுகிறார்.