ஸ்ரீவி., ஆண்டாள் கோயிலில் யாகசாலை அமைக்க கால்கோள் விழா
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி, யாகசாலை அமைக்க கால்கோள் நடும் விழா நடந்தது. ஸ்ரீவி., ஆண்டாள் கோயில் கும்பாபிஷேகம் அடுத்தாண்டு ஜன.,20ல் நடக்கிறது. இதையொட்டி இக்கோயிலின் விமானக்கோபுரத்திற்கு தங்கத்தகடுகள் பதிக்கும் பணி விரைவாக நடந்து வருகிறது. இன்னும் சில நாட்களில் இப்பணி முடியும் என எதிர்பார்க்கபடுகிறது.
கால்கோள் விழா: இந்நிலையில் கும்பாபிஷேக யாகசாலை பூஜைகள் ஜன.,15ல் துவங்கவுள்ளது. இதற்காக ஹோமகுண்டங்களுடன் யாகசாலை மற்றும் திருவிழா பந்தல் அமைக்க கால்கோள் நடும் விழா, நேற்று கோயிலில் நடந்தது. பத்ரிநாராயணா பட்டர் சிறப்பு பூஜைகள் செய்தார். முத்து பட்டர், கிரிபட்டர்,வேதபிரான் அனந்தபிரான் பட்டர், சுதர்சன், ஸ்தானிகம் ரமேஷ், தக்கார் ரவிச்சந்திரன், கலசலிங்கம் பல்கலைகழகம் பதிவாளர் வாசுதேவன், தொழிலதிபர் ராஜப்பா, செயல்அலுவலர் ராமராஜா, நாச்சியார் சாரிட்டி டிரஸ்ட் நிர்வாகிகள் குருசாமி, ரெங்கசாமி மற்றும் கோயில் அலுவலர்கள், பக்தர்கள் பங்கேற்றனர்.