விலைப்பட்டியல் இல்லாத கோயில் பிரசாத ஸ்டால்கள்!
ரெட்டியார்சத்திரம்: கோயில் பிரசாத ஸ்டால்களில் போதிய விலைப்பட்டியல் அமைக்காமல், விருப்பம்போல் கூடுதல் விலைக்கு விற்பனை செய் வது அதிகரித்துள்ளது. அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பெரும்பாலான கோயில்கள், உண்டியல், நில குத்தகை, வணிகவளாகம் போன்ற வகையிலான வருவாய் கொண்டதாக உள்ளன. சில குக்கிராம கோயில்கள் பிரசித்தி பெற்றவையாக இருப்பினும், அங்குள்ள சுவாமி படங்கள், பி ரசாதம், பூஜை பொருட்கள் விற்பனை போன்ற ஸ்டால்களுக்கான வருமானமே அடிப்படை ஆதாரமாக அமைந்துள்ளன. அளவு, அதிகபட்ச விலை போன்றவற்றை நிர்ணயித்து, விலைப்பட்டியல் அமைத்து நடத்துவதற்கான உரிமம் ஏல அடிப்படையில் தனியார் வசம் ஒப்படைக்கப்படுகிறது. அறநிலையத்துறையின் கண்காணிப்பில் இருந்தபோதும், பல இடங்களில் இவற்றின் நிர்ணயிக்கப்பட்ட அளவு, விலை போன்றவை கண்டுகொள்ளப்படுவதில்லை. இப்பிரச்னையால் விருப்பம்போல கூடுதல் வசூல் தாராளமாக நடக்கிறது. சில கோயில்களில் பட்டியலில் உள்ள விலையை சுரண்டியோ, மறைத்தோ அதிக விலைக்கு விற்கின்றனர். விலைப்பட்டியல் இல்லாத சூழலில், விற்பனையாளர் தெரிவிக்கும் கூடுதல் விலை கொடுத்து பிரசாதம் வாங்க வேண்டிய அவலம் நீடிக்கிறது. ரெட்டியார்சத்திரம் கோபிநாதசுவாமி மலைக்கோயில் பிரசாத ஸ்டாலில், விலைப்பட்டியல் அமைக்காமல் கூடுதல் வசூல் நடப்பதாக புகார் எழுந்துள்ளது. அறநிலையத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், அளவில் குறைபாடு, கூடுதல் வசூல் குறித்த புகார் இதுவரை இல்லை. பழுது, சேதம் காரணமாக விலைப்பட்டியல் அகற்றப்பட்டிருக்கலாம். இதனை மீண்டும் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.