கழிஞ்சூர் ஏரி நிரம்பியதால் 26 கிடா வெட்டி வழிபாடு
ADDED :3590 days ago
வேலூர்: பத்தொன்பது ஆண்டுகளுக்குப் பிறகு, கழிஞ்சூர் ஏரி நிம்பியதால், 26 ஆட்டுக் கிடா வெட்டி பொதுமக்கள் வழிபட்டனர். வேலூர் மாவட்டம் காட்பாடி, கழிஞ்சூர் ஏரி, தற்போது பெய்து வரும் கன மழையால், 19 ஆண்டுகளுக்குப் பிறகு, நேற்று காலை, 10 மணிக்கு நிரம்பி வழிந்தது. இதையடுத்து அருப்பு மேடு பகுதி மக்கள், ஏரியில் மலர் தூவி வழிபட்டனர். மதி நகரில் உள்ள ஓம் சக்தி மாரியம்மன் கோவிலில் இருந்து, 108 பெண்கள் பால் குடம் சுமந்து வந்து, ஏரியில் ஊற்றி அபிஷேகம் செய்தனர். இதையடுத்து, ஏரிக்கரையில், 26 ஆட்டுக் கிடா வெட்டி வழிபட்டனர். ஏரியில் இருந்து உபரி நீர் செல்லும் வழிகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்ததால், மதி நகரில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்தது. மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து வந்து, தண்ணீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர்.