வழக்கில் வெற்றி!
அரியலூர் பேருந்து நிலையத்தில் இருந்து 2 கி.மீ. தொலைவில் பெரம்பலூர் சாலையில் உள்ளது பாலதண்டாயுதபாணி திருக்கோயில். பழநியைப் போலவே ஆண்டித் திருக்கோலத்தில் காட்சி தருகிறார் முருகன். ஐந்நூறு வருடங்கள் பழமையான இந்தக் கோயிலில் முனிவர் ஒருவரின் சமாதியின்மேல் முருகப்பெருமான் விக்ரகம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. இங்கு எட்டு நாள் பெருவிழாவாகக் கொண்டாடப்படும் கந்தசஷ்டி விழாவில் தினமும் ஒவ்வொரு அலங்காரத்தில் திருவீதி உலா வரும் வள்ளி - தெய்வானை சமேத முருகப்பெருமானைக் காண கண்கோடி வேண்டும். அதில் 6-ம் நாள் சூரசம்ஹாரமும், 7-ம் நாள் திருக்கல்யாண வைபவமும் முக்கிய நிகழ்ச்சிகள். சூரசம்ஹாரத்தன்று இந்த முருகனை தரிசித்தால் எதிரிகளின் தொல்லை ஒழியும். வழக்கில் வெற்றி கிட்டும். திருக்கல்யாணத்தன்று தரிசித்தால் விரைவில் திருமணம் நடந்தேறும். பிரிந்த தம்பதியர் மீண்டும் ஒன்று சேருவர் என்பது நம்பிக்கை.