நவபாஷாண கோயிலில் அறநிலையதுறை பொறியாளர்கள் ஆய்வு!
தேவிபட்டினம்: ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் நவபாஷாண கோயிலில் தோஷம் நீங்க பரிகார பூஜைகள் செய்யப்படுகிறது. இதற்காக இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். இங்கு பக்தர்களிடமிருந்து அதிக கட்டணம் வசூல் செய்வதை தடுக்க வேண்டும், நவக்கிரக கோயில் பகுதியில் தேங்கும் கழிவுகளை அகற்ற இந்து அறநிலைய துறைக்கு உத்தரவிட வேண்டும் என, தேவிபட்டினத்தை சேர்ந்த முருகேசன், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார். விசாரித்த நீதிபதிகள் நவபாஷாண கோவிலை ஊராட்சி நிர்வாகம் இந்துஅறநிலையத்துறையிடம் ஒப்படைக்க வேண்டும், கழிவுகளை அகற்றுவது தொடர்பான சாத்தியகூறுகள் குறித்து இந்து அறநிலைய துறை அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என, உத்தரவிட்டனர். இந்நிலையில் நீதிபதிகள் வி.ராமசுப்பிரமணியன், என்.கிருபாகரன் அமர்வு முன்பு டிச.,7ல் இந்த மனு மீண்டும் விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டது. நவபாஷாண கோவில் கடலின் மேற்பரப்பில் அமைந்துள்ளது. கோயிலின் கீழ்பகுதியில் தேங்கும் நீர் மறுபகுதிக்குச் செல்ல வழியின்றி தடுப்பு சுவர் அமைந்துள்ளதால் கோயில் மாசுபடுகிறது. எனவே நவக்கிரகம் அமைந்துள்ள பகுதியில் தண்ணீர் செல்ல வழியின்றி உள்ள தடுப்பு சுவரை அகற்றி, இதற்கு பதில் துாண்கள் அமைப்பது குறித்து இந்து அறநிலைய துறை பொறியாளர்கள் ஆய்வு மேற்கொண்டு டிச.15ல் அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என உத்தரவிட்டிருந்தனர். இதைத்தொடர்ந்து நேற்று இந்து அறநிலையத்துறை மதுரை மண்டல செயற்பொறியாளர் மாணிக்கம், சிவகங்கை கோட்ட பொறியாளர் சுப்பிரமணியன் ஆகியோர் நவபாஷாண கோயிலில் ஆய்வு செய்தனர். கோட்ட பொறியாளர் சுப்பிரமணியன் கூறுகையில், “உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு படி நவகிரகம் அமைந்துள்ள பகுதியில் தடுப்பு சுவரை அகற்றி தண்ணீர் செல்வதற்கு ஏதுவாக புதிய துாண்கள் அமைப்பது குறித்தும், கடற்கரை ஓரத்தில் உள்ள தடுப்பு சுவரை அகற்றுவது குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதற்கான செலவினங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இதுகுறித்த அறிக்கை டிச.,15ல் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்யப்படும்,” என்றார்.