உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ராஜகோபுரம் கட்டும் பணி துரிதம்

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ராஜகோபுரம் கட்டும் பணி துரிதம்

திருச்சி: சமயபுரம் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகத்துக்கான திருப்பணிகளில், ஏழு நிலை கொண்ட பிரமாண்ட ராஜகோபுரம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. திருச்சியில், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில், சமயபுரம் மாரியம்மன் கோவில், மலைகோட்டை தாயுமான ஸ்வாமி, திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோவில் ஆகியவை பிரசித்தி பெற்ற திருத்தலங்கள். ஸ்ரீரங்கம், மலைக்கோட்டை ஆகிய கோவில்களில் கும்பாபிஷேகம் நடந்து முடிந்த நிலையில், அடுத்து சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது.

இது குறித்து, கோவில் இணை ஆணையர் தென்னரசு கூறியதாவது: திருப்பணிகள், கடந்த சில ஆண்டுகளாக நடந்து வருகிறது. கோவிலின் வெளி பிரகாரத்தில் தெற்கு மற்றும் வடக்கில் மூன்று நிலை கொண்ட கோபுரங்கள், 60 லட்சம் ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ளன. மேற்கு பகுதியில் ஐந்து நிலைகள் கொண்ட கோபுரம், 40 லட்சம் ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ளது. கோவிலின் கிழக்குப் பகுதியில் பிரமாண்ட ராஜகோபுரம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இங்கு, 40 அடி நீளம், 60 அடி அகலத்துடன், ஏழு நிலைகள் கொண்ட ராஜ கோபுரத்துக்கான அஸ்திவாரம் அமைக்கப்பட்டு, மேல் எழுப்பும் பணி நடந்து வருகிறது. கோபுரத்தின் மேற்புறத்தில் ஏழு கலசங்கள் பொருத்தப் படவுள்ளது. கோவிலில், மூன்று கோடி ரூபாயில் விரிவாக்கம் செய்யும் பணி மேற்கொண்டுள்ளனர். கோவில் வளாகத்தில் பக்தர்கள் வசதிக்காக, 19 லட்சம் ரூபாய் மதிப்பில், மண்டபம் கட்டப்பட்டுள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் முடி காணிக்கை கொடுப்பதற்கான தனி கட்டடம், 2.5 கோடியில் கட்டி பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டு உள்ளது. கோவிலை சுற்றி காம்பவுண்ட் சுவர் கட்டும் பணி தற்போது நடந்து வருகிறது. அம்மை நோய் பாதித்த நிலையில் தரிசனத்துக்கு வரும் பக்தர்கள் வசதிக்காக, கோவில் வளாகத்தில் அம்மை மண்டபம், புதிதாக கட்டப்பட உள்ளது. கோவில் திருப்பணிகள் அனைத்தும், ஆறு மாதத்துக்குள் முடிக்கப்பட்டு, கும்பாபிஷேகத்துக்கு தயார் செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !