மார்க்கபந்தீஸ்வரர் கோவிலில் சிம்ம குளம் திறப்பு
வேலூர்: விரிஞ்சிபுரம் மார்க்கபந்தீஸ்வரர் கோவிலில், கடை ஞாயிறையொட்டி, குழந்தை வரம் தரும் சிம்ம குளம் திறக்கப்பட்டதால், கொட்டும் பனியில் நீராடி, பெண்கள் வழிபட்டனர். வேலூர் மாவட்டம், விரிஞ்சிபுரம் மார்க்கபந்தீஸ்வரர் கோவிலில், ஆண்டு தோறும், கார்த்திகை மாதத்தில், கடைசி ஞாயிற்றுக்கிழமை குழந்தை வரம் தரும் சிம்ம குளம் திறப்பு விழா நடக்கும். சிம்ம குளத்தில் நீராடி எழுந்தால், குழந்தை இல்லாத பெண்களுக்கு குழந்தை பிறக்கும். பில்லி சூனியம் விலகும். வலிப்பால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நோய் விலகும் என்பது காலம், காலமாக நம்பிக்கையாக உள்ளது. இந்த சிம்மகுளம் நேற்று முன் தினம் நள்ளிரவு, 12 மணிக்கு திறக்கப்பட்டது. ரத்தினகிரி பாலமுருகனடிமை ஸ்வாமிகள், கலவை சச்சிதானந்த ஸ்வாமிகள் கலந்து கொண்டு, சிம்ம குளத்தை திறந்து வைத்தனர். இதையடுத்து, பல ஆண்டுகள் ஆகியும் குழந்தை பேறு இல்லாத பெண்கள், பில்லி சூனியம், வலிப்பால் பாதிக்கப்பட்ட பெண்கள், சிம்ம குளத்தில் நீராடி, கொட்டும் பனியை பொருட்படுத்தாமல், ஈரப்புடவையுடன் கோவிலில் படுத்து தூங்கினர். நேற்று காலை, 6.30 மணிக்கு, பிரம்ம குளத்தில் தீர்த்தவாரி, 9 மணிக்கு பாலனுக்கு உபநயன தீட்சை, 9.30 மணிக்கு ஸ்வாமி திருசமாட வீதி ஊர்வலம், பகல், 12 மணிக்கு சிறப்பு அபி?ஷகம் நடந்தது. சிம்மகுளம் திறப்பு விழாவில், அணைக்கட்டு எம்.எல்.ஏ., கலையரசு, கோவில் செயல் அலுவலர் பரந்தாம கண்ணன் கலந்து கொண்டனர். விழாவையொட்டி, வேலூர் பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து விரிஞ்சிபுரத்திற்கு, நள்ளிரவு, 11 மணியில் இருந்து, 95 பஸ்களும், புது பஸ் ஸ்டாண்டில் இருந்து, 15 சிறப்பு அரசு பஸ்களும் இயக்கப்பட்டது.