மீனாட்சி அம்மன் கோயில் டிச. 25ல் ஆருத்ரா தரிசனம்
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு, டிச.,25 நள்ளிரவு முதல் டிச.,26 அதிகாலை வரை அபிஷேகம் நடக்கிறது.இணை கமிஷனர் நா.நடராஜன் கூறியதாவது: பொன்னம்பலம், வெள்ளியம்பலம், ரத்தினசபை, தாமிரசபை, சித்திரசபை என பஞ்ச சபைக்கும், இக்கோயிலில் மட்டும்தான் தனித்தனி உற்சவ திருமேனிகள் உள்ளன.பஞ்ச சபை கொண்ட இக்கோயிலில் நடராஜர் (கால்மாறி ஆடிய வெள்ளியம்பல நடராஜர்), சிவகாமி அம்மன், மாணிக்கவாசகர் சுவாமிகளின் உற்சவ திருமேனிகள், சுவாமி கோயில் ஆறுகால் பீடத்தில் காட்சி தருகின்றன; இதர நான்கு சபை நடராஜர், சிவகாமி அம்மன், 100 கால் மண்டபத்தில் எழுந்தருளச் செய்யப்பட்டுள்ளது. இரு இடங்களிலும் ஒரே காலத்தில் அபிஷேகம், ஆராதனைகள் நடக்கின்றன.தொடர்ந்து கால பூஜைகள் முடிந்து காலை 7 மணிக்கு, பஞ்ச சபை, ஐந்து உற்சவ நடராஜர், சிவகாமி அம்மனுடன் நான்கு மாசி வீதிகளில் திருவீதி உலா வந்து சேர்த்தியாகும்.ஆருத்ரா தரிசனம்: கோயிலில் ஆருத்ரா தரிசனம் டிச.,25 முதல் டிச.,26 அதிகாலை வரை நடக்கிறது. இதற்காக வெள்ளியம்பல நடராஜருக்கும், சிவகாமி அம்மனுக்கும் விடிய, விடிய ஆராதனைகள் நடக்கும். அபிஷேகப் பொருட்களை டிச.,25 மாலை முதல் கோயில் உள்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கொடுக்கலாம். இவ்வாறு கூறினார்.தக்கார் கருமுத்து கண்ணன், இணை கமிஷனர் ஏற்பாடுகளை செய்துள்ளனர்.