உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மார்கழி மாதம் பிறப்பு கோவில்களில் சிறப்பு பூஜை

மார்கழி மாதம் பிறப்பு கோவில்களில் சிறப்பு பூஜை

கோவை : மார்கழி பிறப்பையொட்டி, கோவை சிவாலயங்களிலும், பெருமாள் கோவில்களிலும் அதிகாலையிலேயே நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகளும், பாகவத குழுவினரின், பஜனை நிகழ்ச்சிகளும் நடக்கின்றன. மார்கழி மாதம் இன்று பிறக்கிறது. இதையொட்டி, பெருமாள் கோவில்களில், திருப்பாவையும், சிவாலயங்களில் திருவெம்பாவையும், அதிகாலையில் பாராயணம் செய்யப்படுகிறது. இவை நிறைவடையும் தருணத்தில், பாகவத குழுவினரின், பஜனை நடக்கிறது. பக்திப்பாடல்களை இசைத்தவாறு, கோவை நகரிலுள்ள தெருக்களில், பஜனை குழுவினர் வலம் வருகின்றனர். ராம்நகர், கோதண்டராமர் கோவில், பெரியகடைவீதி லட்சுமிநாரயண வேணுகோபாலசுவாமி கோவில், பாப்பநாயக்கன்பாளையம் சீனிவாசபெருமாள் மற்றும் ஜெகன்நாத பெருமாள் கோவில், ஒலம்பஸ் நரசிங்கபெருமாள் கோவில், உக்கடம் கரிவரதராஜபெருமாள் மற்றும் நரசிம்மபெருமாள் கோவில், சிங்காநல்லுார் உலகளந்த பெருமாள் கோவில், பேரூர் பட்டீசுவரர், கோட்டை மற்றும் பேட்டை ஈஸ்வரன் கோவில்களில் இன்று மார்கழி பிறப்பையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடக்கின்றன. இதற்கான ஏற்பாடுகளை, அறநிலையத்துறை மற்றும் விழாக்கமிட்டியினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !