உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / டிச.,27 பகல் 11.20 மணிக்கு மண்டலபூஜை 9.30 மணி வரை மட்டும் நெய்யபிஷேகம்!

டிச.,27 பகல் 11.20 மணிக்கு மண்டலபூஜை 9.30 மணி வரை மட்டும் நெய்யபிஷேகம்!

சபரிமலை: வரும் 27ம் தேதி பகல் 11.20 மணிக்கு ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவித்து மண்டலபூஜை நடைபெறுகிறது. அன்று காலை 9.30 மணி வரை மட்டுமே நெய்யபிஷேகம் நடைபெறும். இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படும்.

சபரிமலையில் இந்த ஆண்டுக்கான மண்டலகாலம் நிறைவு கட்டத்தை நெருங்கி வருகிறது. கார்த்திகை ஒன்றாம் தேதி தொடங்கி தொடர்ச்சியாக 41 நாட்கள் நடைபெறும் பூஜை ஒரு மண்டல காலம் என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான மண்டலகாலம் கடந்த மாதம் 17ம் தொடங்கி, 32 நாட்கள் கடந்துள்ளது. ஒன்பது நாட்கள் எஞ்சியுள்ள நிலையில் மண்டல பூஜைக்கான ஆயத்த ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

மகரவிளக்கு நாளில், பந்தளம் மன்னர் கொண்டுவரும் ஆபரணங்கள் ஐயப்பனுக்கு அணிவிக்கப்படுகிறது. மண்டலபூஜை அன்று ஐயப்பனுக்கு அணிவிக்க திருவிதாங்கூர் மன்னர் சித்திரை திருநாள் தங்க அங்கி ஒன்றை காணிக்கையாக வழங்கினார். ஆரன்முளா பார்த்தசாரதி கோயிலில் வைக்கப்பட்டுள்ள இந்த அங்கி வரும் 23ம் தேதி பவனியாக எடுத்து வரப்படுகிறது. 26ம் தேதி மதியம் பம்பைக்கு இந்த பவனி வந்தடையும். அதன் பின்னர் தலைச்சுமையாக சன்னிதானம் எடுத்துவரப்படும் அங்கி, மாலை 6.25 மணிக்கு சன்னிதானம் கொண்டுவரப்பட்டு, ஐயப்பன் விக்ரகத்தில் அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடைபெறும்.

27ம் தேதி பகல் 11.20 மணிக்கு மண்டலபூஜை நடைபெறும் என்று தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரரு கூறினார். பூஜை நடத்துவதற்கு வசதியாக ஒன்றரை மணி நேரம் முன்னதாக காலை 9.30 மணிக்கு நெய்யபிஷேகம் நிறைவு செய்யப்படும். தொடர்ந்து கோயில் முன்புறம் மண்டபத்தில் களபம் பூஜிக்கப்பட்டு பவனியாக ஸ்ரீகோயிலுக்கு எடுத்து செல்லப்பட்டு அபிஷேகம் நடைபெறும். அதன் பின்னர் தங்கஅங்கி அணிவிக்கப்பட்டு மண்டலபூஜை நடைபெறும். அன்று இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படும். அதன் பின் பக்தர்கள் சன்னிதானம் செல்ல அனுமதி கிடையாது. மகரவிளக்கு கால பூஜைக்காக டிச.,30 மாலை ஐந்து மணிக்கு நடை திறக்கும். 31 அதிகாலை முதல் நெய்யபிஷேகம் நடைபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !