பெரியகுளம் பெருமாள் கோயில்களில் சொர்க்க வாசல் திறப்பு
பெரியகுளம்: பெரியகுளம் வரதராஜப் பெருமாள் கோயிலில், வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நேற்று அதிகாலை 5 மணிக்கு தனூர் மாத பூஜையுடன் சிறப்பு பூஜைகள் துவங்கின. பக்தர்கள் பெருமாள் நாமம் ஒலிக்க, சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. உற்சவமூர்த்தி வரதராஜப் பெருமாள், பூதேவி, ஸ்ரீதேவியுடன் சிறப்பு அலங்காரத்தில் வைகுண்ட வாசல் வழியாக வெளியே வந்தார். உச்சிகால பூஜை திருவாராதனம், வைகுண்ட ஏகாதசி விசேஷ பூஜை, தீபாராதனை முடிந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. பாம்பாற்று பக்த ஆஞ்சநேயர் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, ஆஞ்சநேயருக்கு அபிஷேகம், ஆராதனை நடந்தது. உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் நகர் வலம் வந்தார். லட்சுமிபுரம் லட்சுமிநாராயணப் பெருமாள் கோயில், சொர்க்க வாசல்வழியாக பெருமாள், லட்சுமி அம்பாளுடன் வந்தார். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
தேவாரம் அரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு மூலவருக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. அதிகாலை திருமஞ்சனத்துடன் சிறப்பு பூஜைகள் துவங்கின. பரமபத வாசல் வழியாக உற்சவர் அருள்பாலித்தார். மாலையில் பூதேவி, ஸ்ரீதேவி சமேதராக உற்சவர் நகர்வலம் வந்தார். ஏற்பாடுகளை இளைய ஜமின்தார் சிவராஜ பாண்டியன் செய்திருந்தார்.
* ஆண்டிபட்டி, ஜம்புலிபுத்தூர் கதலி நரசிங்கப்பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. ஸ்ரீதேவி, பூதேவியருடன் கதலி நரசிங்கப்பெருமாள் சொர்க்கவாசல் வழியாக நம்மாழ்வாருக்கு மோட்சம் கொடுத்த பின், பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கோயில் பிரகாரம் வழியாக சுவாமி ஊர்வலம் நடந்தது. பக்தர்கள் "கோவிந்தா என கோஷமிட்டு வழிபட்டனர். சுற்றுப்பகுதி கிராமங்களைச்சேர்ந்த ஏராளமான பக்தர்கள் சொர்க்கவாசல் வழியாக வந்து பெருமாளை வழிபட்டு சென்றனர். கோயில் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.
* போடி சீனிவாச பெருமாள் கோயிலில் நேற்று அதிகாலை நடந்த சொர்க்க வாசல் திறப்பு விழாவில் ஸ்ரீ தேவி, பூமி தேவியுடன் சீனிவாசப் பெருமாள் ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தன. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டுதரிசித்தனர். ஏற்பாடுகளை தக்கார் பாலகிருஷ்ணன், சிறப்பு அலங்காரங்களை கார்த்திக் பட்டாச்சியர் செய்திருந்தார்.