உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உடுமலை பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு

உடுமலை பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு

உடுமலை : உடுமலை மற்றும் சுற்றுப் பகுதிகளில் உள்ள பெருமாள் கோவில்களில், வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, நேற்று சொர்க்கவாசல் திறக்கப்பட்டது; சிறப்பு அபிேஷகம் பூஜைகள் நடந்தன. உடுமலை, பெரியகடை வீதியில் உள்ள சீனிவாச பெருமாள் கோவிலில் (நவநீத கிருஷ்ணஸ்வாமி கோவில்), வைகுண்ட ஏகாதசி திருவிழா, டிச., 11ம் தேதி மாலை, 4:00 மணிக்கு, பகல் பத்து உற்சவத்துடன் துவங்கியது. டிச., 20ம் தேதி வரை, பகல் பத்து உற்சவத்தில், சுவாமி ஸ்ரீமச்சாவதாரம், கூர்மாவதாரம், நரசிம்ஹவதாரம், ஹயக்கிரீவ அவதாரம், வாமனவதாரம், பரசுராமவதாரம், கோதண்டராமர் அவதாரம், பலராமவதாரம், கிருஷ்ணாவதாரம், மோகினி அலங்காரம் நாச்சியார் திருக்கோலம் என, தினமும் ஒவ்வொரு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்; தினமும் மாலை, 4:00 முதல், 6:00 மணி வரை, ஆழ்வார் பாசுரங்கள் சேவை நடந்தது.

இதில், திருப்பல்லாண்டு, பெரியாழ்வார் திருமொழி, திருப்பாவை, பெரிய திருமொழி உள்ளிட்ட பாசுரங்கள் பாடப்பட்டன. வைகுண்ட ஏகாதசியான நேற்று காலை, 5:00 மணிக்கு, சுவாமிக்கு, அபிேஷகம், அலங்காரம் செய்யப்பட்டு, சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. பக்தர்கள், கோவிந்தா... கோவிந்தா... கோஷத்துடன் சுவாமியை வழிபட்டனர்; சுவாமி பரமபதநாதன் அலங்காரத்தில் அருள்பாலித்தார். இதையடுத்து, நேற்று மாலை, 6:00 மணிக்கு, ராப்பத்து உற்சவம் துவங்கியது. முதல் நாளான நேற்று திருவாய் மொழி முதல் பத்து பாசுரங்கள் சேவை நடந்தது. வரும், 31ம் தேதி வரை நடக்கும் ராப்பத்து உற்சவ நாட்களில் சுவாமி, தன்வந்திரி, திரிவிக்கிரமன், மகாவிஷ்ணு, வித்யா ராஜகோபாலன், பாண்டுரங்கன், ராப்திநாதன், நவநீதகிருஷ்ணன், ராமர் பட்டாபிேஷகம், விஸ்வரூபம் என, ஒவ்வொரு அலங்காரத்தில் காட்சியளிக்கிறார்; இன்று, தன்வந்திரி அலங்காரமும், திருவாய்மொழி இரண்டாம் பத்து பாசுரமும் நடக்கிறது.

வரும், 30ம் தேதி வரை, ஒவ்வொரு நாளும் ஒரு பாசுரம் வீதம் திருவாய் மொழியின் பத்து பாசுரங்கள் சேவை நடக்கிறது. டிச., 31ம் தேதி நம்மாழ்வார் மோட்ச அலங்காரத்தில், பெருமாள் அருள்பாலிக்கிறார். அன்று பிற்பகல், 3:30 மணி வரை, திருவாய்மொழித்திருநாள் சாற்றுமறை, தீபாராதனை உள்ளிட்டவை நடக்கின்றன. உடுமலை நெல்லுக்கடை வீதியில் உள்ள சவுந்திரராஜப் பெருமாள் கோவிலில், வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, நேற்று அதிகாலை, 4:30 மணிக்கு, மூலவர் பெருமாளுக்கு அபிேஷகம் நடந்தது. 5:30 மணிக்கு, சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. 6:30 முதல், 11:30 மணி வரை, சமயபுர ஆயிர வைசியர் மண்டபத்தில் சேவை உற்சவம் நடந்தது. காலை, 11:30 மணிக்கு, சுவாமி வீதியுலா நடந்தது; மாலை, 6:30 மணிக்கு, உற்சவருக்கு ஏகாதசி அபிேஷகம் நடந்தது. இதேபோல், உடுமலை மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள பெருமாள் கோவில்களில், நேற்று காலை, சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !