உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கரூர் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு கோலாகலம்

கரூர் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு கோலாகலம்

கரூர்: வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு, கரூர் அபயப்பிரதான ரங்கநாதசாமி கோவில் உட்பட பல்வேறு பெருமாள் கோவில்களில், நேற்று அதிகாலை கோவிந்தா, கோவிந்தா என்ற கோஷத்தடன் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. கரூர் அபயப்பிரதான ரங்கநாத ஸ்வாமி கோவிலில், வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு, நாள்தோறும் பல்வேறு அலங்காரங்களில் ஸ்வாமி பக்தர்களுக்கு சேவை சாதித்தார். கடந்த, 12ம் தேதி துவங்கி வரும், 31ம் தேதி வரை பகல்பத்து, இராபத்து நிகழ்ச்சிகள் கோலாகலமாக நடந்து வருகிறது. அதன்படி, கரூர் அபயப்பிரதான ரங்கநாத ஸ்வாமி கோவிலில் துவங்கிய பகல்பத்து முடிந்ததும், நேற்று, அதிகாலை, 5 மணி அளவில் பெருமாள் சிறப்பு அலங்காரத்துடன் சொர்க்கவாசல் கடந்து சென்றார். அப்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என்ற கோஷத்துடன் சொர்க்கவாசலை கடந்து சென்றனர். இதேபோல், கரூர் பண்டரிநாதன் ஸ்வாமி கோவில், குளித்தலை நீலமேகப் பெருமாள் கோவில், கிருஷ்ணராயபுரம் லஷ்மி நாராயண பெருமாள் கோவில், வைகைநல்லூர் அக்ரஹாரம் லட்சுமி நாராயண பெருமாள் கோவில் உள்ளிட்ட வைணவ கோவில்களில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. மேலும், விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு, அந்தந்த கோவில் நிர்வாகம் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது. கரூர் மாவட்ட கலெக்டர் ஜெயந்தி உட்பட பல்வேறு அரசு அதிகாரிகள், அபயப்பிரதான ரங்கநாத ஸ்வாமி கோவிலில் நடந்த சொர்க்க வாசல் திறப்பு விழாவில் பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி கமிஷனர் ரத்தினவேல்பாண்டியன், இணை கமிஷனர் கல்யாணி மற்றும் அந்தந்த கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !