உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அமணலிங்கேஸ்வரர் கோவிலில் ஆடிப்பெருக்கு கோலாகலம்

அமணலிங்கேஸ்வரர் கோவிலில் ஆடிப்பெருக்கு கோலாகலம்

உடுமலை : திருமூர்த்தி மலை அமணலிங்கேஸ்வரர் கோவிலில், ஆடிப்பெருக்கு பண்டிகையையொட்டி, சிறப்பு பூஜைகள் நடந்தன. உடுமலை அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் திருமூர்த்தி மலை உள்ளது. மலை அடிவாரத்தில் சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகியோர் ஒருங்கே குடிகொண்டுள்ள பிரசித்தி பெற்ற அமணலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. நேற்று ஆடிப்பெருக்கு விழாவையொட்டி, கோவிலில், அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள் நடந்தன. ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வழிபாடு நடத்தினர். பாலாற்றங்கரையில், முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபட்டனர். அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.பொள்ளாச்சி: ஆடிப்பெருக்கு பண்டிகையை முன்னிட்டு, பொள்ளாச்சி மாரியம்மன் கோவிலில், காலை 6.00 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பாலக்காடு ரோடு லட்சுமி நரசிம்மர் கோவிலில், 16 வகையான திரவியங்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. பெருமாள் கோவில், அம்மன் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது. அம்பராம்பாளையம் ஆற்றின் கரையோரத்தில் மக்கள், மூதாதையர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர். பெண்கள் மஞ்சள் சரடு வைத்து வழிபாடு நடத்தி, அவற்றை கழுத்தில் அணிந்து கொண்டனர். சிறப்பு பஸ்கள் இயக்கம்: ஆடிப்பெருக்கு பண்டிகையை கொண்டாட, ஆனைமலை, ஆழியாறு உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்றனர். இதனால், பொள்ளாச்சி வழித்தடத்தில் இயக்கப்பட்ட அனைத்து பஸ்களிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது. ஆனைமலை, ஆழியாறுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. ஆனைமலை மாசாணியம்மன் கோவிலுக்கு எட்டு பஸ் களும், ஆழியாறுக்கு ஒரு பஸ்சும் கூடுதலாக இயக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !