காரமடை அரங்கநாதர் சுவாமி கோவிலில் சொர்க்க வாசல் திறப்பு!
காரமடை: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு காரமடை அரங்கநாதர் சுவாமி கோவிலில் நேற்றுமுன் தினம் சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. ஸ்ரீதேவி, பூதேவியுடன், சேஷ வாகனத்தில் எழுந்தருளிய அரங்கநாத பெருமாள் சொர்க்க வாசல் வழியே வந்தார். அவரை தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்தனர். கொங்கு நாட்டில் முதன்மை வைணவ ஸ்தலமானது காரமடையில் உள்ள அரங்கநாத சுவாமி கோவிலாகும். இக்கோவிலில் சுயம்புவாய் எழுந்தருளிய அரங்கநாத சுவாமி லிங்க வடிவில் அருள்பாலித்து வருகிறார். இக்கோவிலில் மாசி மக திருத்தேர் விழாவும், புரட்டாசி மாத சனிக்கிழமை விழாக்களும் மற்றும் மார்கழி மாதத்தில் வைகுண்ட ஏகாதசி பகல் பத்து மற்றும் இராப்பத்து உற்சவங்களும் சிறப்பு வாய்ந்ததாகும். கடந்த 11ம் தேதி வைகுண்ட ஏகாதசி விழா பகல்பத்து உற்சவத்துடன் தொடங்கியது. முக்கிய நிகழ்ச்சியான சொர்க்க வாசல் திறப்பு சிறப்பாக நடைபெற்றது. ஸ்ரீதேவி பூதேவியுடன் சேஷ வாகனத்தில் எழுந்தருளிய உற்சவர் அரங்கநாத பெருமாள் சொர்க்க வாசல் வழியாக வந்தார். பெருமாளை நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், இராமனுஜர் ஆகிய மூவரும் எதிர் கொண்டு சேவித்தனர். இவர்கள் மூவருக்கும் முதலாவதாக பெருமாள் காட்சி தந்தார். பெருமாளை தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் ரங்கா, ராமா, கோவிந்தா என கோஷமிட்டு சொர்க்க வாசல் வழியே வந்தனர்.